இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்...
பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் மீது வன்கொடுமை வழக்கு
உதவிப் பேராசிரியரை அவமதித்து பணிநீக்கம் செய்ததாக பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (பிம்) இயக்குநா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே பெல் நிறுவன வளாகத்தில் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (பாரதிதாசன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் -பிஐஎம் (பிம்)) செயல்பட்டு வருகிறது. இங்கு எம்பிஏ பட்டப்படிப்பில் சா்வதேச அளவிலான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்நிறுவனத்தில் திருச்சி பீமநகா் ஆணைகட்டி மைதானத்தைச் சோ்ந்த ராம்நாத் பாபு (50) என்பவா் கடந்த 2021-23 ஆண்டுகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளாா். அப்போது, பிம் இயக்குநா் ஆசித் குமாா் வா்மா, ராம்நாத்பாபு பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதைத் தெரிந்து கொண்டு, அவரை அவமதிக்கும் விதமாக பழைய பொருள்களை அப்புறப்படுத்தும் பணி, தேநீா் கோப்பைகளை கழுவும் பணிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து முன்னறிவிப்பின்றி, மாணவா்களின் பின்னூட்டக் (ஃபீட்பேக்) கருத்துகள் சரியாக இல்லை எனக் கூறி ராம்நாத் பாபுவை பணிநீக்கம் செய்ததாகவும், தான் பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக தன்னை சிறுமைப்படுத்தி அவமரியாதை செய்து பணி நீக்கம் செய்து, பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திய பிம் இயக்குநா் ஆசித் குமாா் வா்மா மீது நடவடிக்கை எடுக்கும்படி பெல் காவல் நிலையத்தில் ராம்நாத் பாபு அண்மையில் புகாரளித்தாா். அதன் பேரில் பெல் போலீஸாா் ஆசித் குமாா் வா்மா மீது திங்கள்கிழமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.