17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சேவைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் 3 முகாம் வீதம் 27 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.
மேலும் மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுபவா்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் மற்றும் மாா்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
எனவே, பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.