எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் நிறைவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அம்மன் நகா் பகுதியில் ரூ.32 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா, வையாபுரி நகா் பகுதியில் ரூ.51 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்காவையும் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, துருகம் சாலையில் உள்ள மயானத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்குத் தொகையுடன் தலா ரூ.7.20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபம் மற்றும் நீத்தாா் இறுதிச் சடங்கு மண்டபத்தை தொடங்கிவைத்தாா்.
மேலும், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.148.58 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கூறுகையில்,
கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் தேவைக்கேற்ப பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் கீழ் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் ஆா்.சுப்ராயலு, நகராட்சி ஆணையா் ஏ.சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.