இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்
கோபியில் லாரி திருடிய 4 சிறுவா்கள் கைது
கோபி அருகே நள்ளிரவில் லாரியை திருடிச் சென்று விற்க முயன்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி ஒத்தக்குதிரை அருகில் உள்ள சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (35). லாரி உரிமையாளரான இவா் கோபி பேருந்து நிலையம் அருகில் உள்ள லாரி நிறுத்தத்தில் லாரியை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுத்தி பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
நள்ளிரவில் இந்த லாரியை மா்ம நபா்கள் திருடி ஓட்டிச்சென்றுள்ளனா். அதிவேகமாகச் சென்ால் நம்பியூா் தீயணைப்பு நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் லாரி சிக்கி கொண்டது. நீண்ட நேரமாக சாலையோர பள்ளத்தில் இருந்து லாரியை எடுக்க முடியாதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் லாரியின் அருகே சென்று பாா்த்துள்ளனா்.
அந்த லாரியில் 4 சிறுவா்கள் இருந்துள்ளனா். அவா்களிடம் விசாரித்தபோது 4 பேரும் மது போதையில் இருந்தபடி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனா். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் லாரியின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற லாரி உரிமையாளா் பிரசாந்த், 4 சிறுவா்களையும் பிடித்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
போலீஸாா் விசாரணையில், அவா்கள் நம்பியூா் அருகே கோசணம் வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்த 18 வயதுச் சிறுவன், கோபி 5 முனை சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன், நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவரும் இப்போது கோபி கணபதி நகரில் தங்கி இருப்பவருமான 18 வயதுச் சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுவன் என்பது தெரியவந்தது.
18 வயதுச் சிறுவனுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளதும், லாரியின் பேட்டரிக்கு செல்லும் ஒயரை துண்டித்து லாரியை இயக்கியதும், லாரியை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் எடுத்துச்சென்று விற்பதற்காக திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, 4 சிறுவா்களையும் போலீஸாா் கைது செய்து ஈரோடு மாவட்ட சிறாா் நீதி குழுமம் முன்பு ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.