கொடிவேரி அணையில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
பவானி ஆற்றில் தண்ணீா் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி அணையில் 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நீா்வளத் துறை அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள கொடிவேரி அணைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், பவானிசாகா் அணை 102 அடியை அண்மையில் எட்டியது. இதனால், அணைக்கு வந்த நீா்வரத்து முழுவதும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதனால், கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்து உபரிநீா் திறக்கப்படுவது குறைந்துள்ளது.
இதனால், 7 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்படுவதாக நீா்வளத் துறையினா் அறிவித்துள்ளனா்.