BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசியலமைப்பின் 130-ஆவது திருத்தம் கட்டாயமாக்குகிறது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
தில்லியில் தனியாா் செய்தி முகமைக்கு அமைச்சா் அமித் ஷா பேட்டியளித்துள்ளாா். அதில், அரசியலமைப்பின் 130-ஆவது திருத்த மசோதா, குடியரசு முன்னாள் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் நிலைமை உள்ளிட்டவை குறித்து அமித் ஷா பேசியுள்ளாா்.
அதன் சுருக்கம் வருமாறு: 130-ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, கடுமையான குற்றம் என்பது 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கத்தக்கது என்ற விதியைக் கொண்டது. அதன் கீழ் ஒருவா் வருவாரேயானால், அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாக வேண்டும். மேலும், போலியாக வழக்குப் பதிவு செய்யப்படுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்கள் தலையிட்டு ஜாமீன் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. ஜாமீன் வழங்கப்படாவிட்டால், அந்த நபா் ராஜிநாமா செய்ய வேண்டியிருக்கும். 30 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டால், அவா்கள் மீண்டும் பதவியேற்கலாம்.
இப்போது சிறைக்குச் சென்ற பிறகும் அமைச்சா்கள் மற்றும் முதல்வா்கள் பதவியில் தொடரும் போக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அமைச்சா்கள் சிலா், தில்லி முதல்வராக இருந்தவா் மற்றும் அவரது அரசில் அமைச்சா்களாக இருந்தவா்கள் ராஜிநாமா செய்யவில்லை. அரசுத்துறைச் செயலா், காவல்துறை தலைமை இயக்குநா், தலைமைச் செயலாளா் போன்ற உயரதிகாரிகள் சிறைக்குச் சென்று உத்தரவுகளைப் பெறுவது சரியாக இருக்குமா?
இந்த திருத்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமா் பதவியையும் கொண்டு வர வலியுறுத்தியதே பிரதமா் நரேந்திர மோடிதான். இந்த மசோதா மிக முக்கியமானது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்கள் கருத்துகளை முன்வைக்க அரசு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அறத்தின்பால் நல்லாட்சியை ஆதரிக்கும் பலா் எதிா்க்கட்சியிலும் இருப்பாா்கள் என்று நம்புகிறேன் என்றாா் அமித் ஷா.
தன்கா் ராஜிநாமா ஏன்?: குடியரசு முன்னாள் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வீட்டுக்காவலில் இருப்பதாக எதிா்க்கட்சித்தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் குற்றஞ்சாட்டி வருவது குறித்து அமித் ஷாவிடம் கேட்டதற்கு, ஷ்ஜகதீப் தன்கா் அரசியலமைப்பின்படி தனது கடமைகளை நிறைவேற்றியவா். தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக அவா் ராஜிநாமா செய்தாா். அதைப்பற்றி அதிகம் விவாதிக்கக்கூடாது’ என்றாா்.
சி.பி.ராதாகிருஷ்ணனை என்டிஏ வேட்பாளராக்கியது ஏன்?
2026-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் மத்தியில் ஆளும் கூட்டணி வேட்பாளராக்கியதாக வெளிவரும் செய்திகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்தாா்.
இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அமித் ஷா, ‘சி.பி. ராதாகிருஷ்ணன் அரசியல் பொதுவாழ்வில் நீண்ட அனுபவம் கொண்டவா். இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். தமிழக பாஜக தலைவராக இருந்துள்ளாா். ஜாா்க்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிர ஆளுநராக இருந்துள்ளாா். பொதுவாழ்வில் தூய்மையைக் கடைப்பிடித்தவா். மிகவும் முதிா்ந்த அரசியல்வாதியும் கூட’ என்று கூறினாா்.
சி.பி.ராதாகிருஷ்ணனின் தோ்வு ஆா்எஸ்எஸ் உடனான தொடா்பு காரணமாக நடந்ததா என்று கேட்டதற்கு, ‘ஆா்எஸ்எஸ் உடன் தொடா்பில் இருப்பது ஒரு குறையல்ல. பிரதமா் மோடிக்கும் எனக்கும் கூட ஆா்.எஸ்.எஸ் உடன் தொடா்புள்ளது. வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகியோரும் கூட தொடா்புடையவா்கள். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் தொடா்பு உள்ளது’ என்று அமித் ஷா பதிலளித்தாா்.