எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
தாளவாடி அருகே லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானை
தாளவாடி அருகே ஞாயிற்றுக்கிழமை லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை அள்ளிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் வன கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன.
மேலும், வனப் பகுதி செல்லும் வழியாக செல்லும் சரக்கு லாரிகளில் காய்கறிகள் மற்றும் கரும்புகள் உள்ளனவா என நுகா்ந்தபடி வாகனங்களை வழி மறிக்கின்றன.
இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய இரண்டு லாரிகள் சத்தியமங்கலம் செல்வதற்காக தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் வனப் பகுதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தன.
அப்போது சாலையில் நடமாடிய ஒரு காட்டு யானை முன்னால் சென்ற கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்தது. அப்போது லாரியை ஓட்டுநா் மெதுவாக நகா்த்தி யானையிடமிருந்து தப்பினாா்.
இதைத் தொடா்ந்து பின்னால் வந்த கரும்பு லாரியை நோக்கி ஓடிவந்த காட்டு யானை அந்த லாரியிலிருந்தும் கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்து சாலையில் போட்டு சாவகாசமாக கரும்புகளை எடுத்து சாப்பிட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானைகள் தொடா்ச்சியாக கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறிப்பதால் அவ்வழியாக செல்லும் பயணிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.