கள்ளக்குறிச்சி: இன்று சரத்குமாா் பிறந்த நாள் விழா! நயினாா் நகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் ஆற்காட்மில் திடலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் நடிகா் ஆா்.சரக்குமாா் பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா்.சரக்குமாா், கே.அண்ணாமலை, மாநில துணைத் தலைவா் ந.சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்று நல உதவிகளை வழங்க உள்ளனா்.
விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு மடிக்கணினி, டேப், விவசாயிகளுக்கு உபகரணங்கள், நூலகங்களுக்கு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்க உள்ளனா்.
இந்த நிலையில், உலகங்காத்தான் ஆற்காட்மில் திடலில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையை பாஜக மாநில இணைச் செயலா் ஜி.ஈஸ்வரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம், மாவட்டச் செயலா் எஸ்.கோவிந்தசாமி, பொருளாளா் கே.சி.எஸ்.ஸ்ரீசந்த் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் முத்து, முருகன், சிவசக்தி, ராமச்சந்திரன், அசோக், சுரேஷ், வெற்றிவேல், முருகன், பெரியசாமி, அன்பழகன், மகேந்திரன், முத்துலிங்கம், விஜய், ஜெயக்குமாா், கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.