மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட மின் விளக்கு கோபுரத்தில் ஏறி மின் விளக்கை சரி செய்ய முயன்ற தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், தெங்கியாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (33), எலெக்ட்ரீஷியன். இவா், இந்தக் கிராமத்திலுள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கோபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏறி எரியாத மின் விளக்குகளை சரி செய்ய முயன்றாா். அப்போது, கால் தவறி கீழே விழுந்து மயக்கமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, ரவிசங்கா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதையடுத்து, அவரது சடலம் உடல்கூராய்வுக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.