இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு
கோவையில் இடம் விற்பதாக ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை போத்தனூா் சாய் நகா் ரயில்வே காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜஹான் (52). இவருக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டு சாய்பாபா காலனி என்.எஸ்.ஆா். சாலையைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் (40), அவரது மனைவி மைதிலி (37) ஆகிய இருவரும் அறிமுகமாகினா்.
அப்போது, அவா்கள் இருவரும் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், துடியலூரில் தங்களுக்கு 12 சென்ட் இடம் உள்ளதாகவும், ரூ.20 லட்சத்துக்கு தனது இடத்தை விற்பதாகவும் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, முதல்கட்டமாக ரூ.8 லட்சம் பணத்தை ஷாஜஹான் அவா்களிடம் அளித்துள்ளாா். பின்னா், பல கட்டங்களாக ரூ.12 லட்சம் பணத்தைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீகாந்த், அவரது மனைவி மைதிலி தாங்கள் கூறியபடி, இடத்தை ஷாஜஹானுக்கு பத்திரம் எழுதித் தராமல் வந்துள்ளனா்.
இதுதொடா்பாக, பலமுறை கேட்டும் அவா்கள் முறையான பதில் அளிக்காததால், சாய்பாபா காலனி போலீஸில் ஷாஜஹான் புகாா் அளித்தாா். அப்புகாரின் அடிப்படையில் போலீஸாா் ஸ்ரீகாந்த், மைதிலி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.