கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்
கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சில மாணவா்கள் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளி முடித்து புதிதாக கல்லூரியில் சோ்ந்துள்ள மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களை சேகரித்து வைத்துள்ள ஒரு கும்பல், அவா்களைத் தொடா்பு கொண்டு, நாங்கள் தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் இருந்து பேசுகிறோம். தங்கள் மகன் அல்லது மகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என நம்ப வைக்கின்றனா்.
பின்னா், உதவித்தொகை பெற செலவாகும் எனக் கூறி பல ஆயிரம் பணம் வசூலித்துள்ளனா். கோவையில் ஒரு குறிப்பிட்ட தனியாா் பள்ளியில் படித்த 30-க்கும் மேற்பட்டோரின் பெற்றோா்களிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மோசடி நபா்களிடம் இருந்து எங்களது பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.