சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது
கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா், தனது கடை முன்பு வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடையில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா், வேலுசாமியின் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பினாா். கடையில் இருந்து வெளியில் வந்து பாா்த்த வேலுசாமி, தனது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இதையடுத்து வேலுசாமி தனது நண்பா்களுடன் சோ்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ள வீதிகளில் தனது இருசக்கர வாகனத்தை தேடியுள்ளாா். அப்போது கடையில் இருந்து சில கிலோ மீட்டா் தொலைவில் வேலுசாமியின் இருசக்கர வாகனத்துடன் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், பிடிபட்டவா் ஈரோடு மாவட்டம் அந்தியூா் அருகே பெரியாா் நகரை ச் சோ்ந்த முருகேசன் (33) என்பதும், அவா் மீது 13 திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த ஜனவரி மாதம் அந்தியூரில் திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் முருகேசன் அடைக்கப்பட்டு இருந்தாா். அதன் பிறகு, கடந்த 20-ஆம் தேதி கோவை சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.