என்னை நெகிழ வைத்த சென்னைக்காரர்கள்! - வீண் பழிகளை சுமக்கும் சென்னை| #Chennaidays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வருடம் 2009. என்னுடைய பத்தொன்பதாவது வயதில் நான் சென்னைக்கு வந்து வேலை பார்த்த அனுபவம் என்பது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. சென்னைக்கு வருவோர் பெரும்பாலும் சிற்றூர்களில் இருந்துதான் வருவர். அதிலும் என்னைப்போன்ற பதின்ம பருவங்களில் சென்னைக்கு வருவோர் பெரும்பாலும் கல்விக்காகவும் இல்லையெனில் போட்டித் தேர்வுகளில் பங்கெடுப்போர்களாகவும் வருவார்கள். ஆனால் அங்கேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என்றால் பெரிதும் யோசிப்பார்கள்.
காரணம், சென்னை என்றாலே மக்கள் தொகை அதிகம், திருட்டு நிறைய நடக்கும், அங்கே மனிதர்கள் இல்லை இயந்திரங்கள் தான் அதிகம் என்றெல்லாம் நிறைய எதிர்மறை கருத்துக்களை எங்கள் ஊரில் உள்ள பெரியோர் ஊரெங்கும் அள்ளித்தெளித்துக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் என் மனதில் இருந்தாலும் நம் ஊரில் இல்லாத அளவுக்கு பெரிய கட்டிடங்கள், மின்சார ரயில்கள், புதிது புதிதாகத் தொடங்கப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் அன்றைக்கு அனைவரும் காணத் துடித்த மெட்ரோ ரயில்களின் கட்டுமானப் பணிகள் என்று என்னை சுண்டி இழுக்கத்தான் செய்தன.

தெற்கில் இருந்து வருபவர்களை சென்னை மக்கள் பெரிதும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு வீடு தருவதற்கு மிகவும் தயங்குவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் சென்னைக்கு வந்த புதிதில் மேன்ஷன் வாழ்க்கை எனக்கு அறிமுகமான தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது அந்தப் பக்கத்தில் தேநீர்க் கடை நடத்திய மணி அண்ணா தான்.
நான் தினமும் சாப்பிடும் ஹோட்டலை நடத்திய செல்வம் அண்ணா தான் எனக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். இவர்கள் இருவரும் சென்னைக்காரர்கள் தான். பின்னாட்களில் நான் 2021 ஆம் ஆண்டு சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து வசித்த போதும் எனக்கு உடனே வீடு கொடுத்து உதவியது சென்னைக்காரர் தான்.
சென்னையைப் பற்றி தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் பேச்சு இருக்கும். காரணம், அது நம் தலைநகரம் என்பதைத் தாண்டி அந்த ஊரில் நம்மில் இருந்து சென்று கொடிநாட்டியவர்களின் வரலாறாகத்தான் இருக்கும். இன்றைக்குப் படித்து முடித்து IT யில் பணிபுரியச் செல்வோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கிறது. ஆனால் அன்றைக்கு அங்கே சென்றவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள் இல்லை.
வாழ்வில் அடிபட்டவர்கள், வீட்டின் வறுமை தாங்காமல் பெற்றோரையும் சொந்த ஊர்களையும் விட்டுப் பிரிந்து சென்றவர்கள் இப்படி நிறைய பேர் சென்னை பக்கம் கரை ஒதுங்கியதன் காரணம், அதன்பின் அவர்கள் வாழ்வில் கண்ட மாற்றங்கள், இவையாவும் சென்னை பற்றிய பேச்சுக்கள் தெருவோரம் இருக்கும் தேநீர்க் கடைகளில் இருந்து பள்ளிகள் மற்றும் வீட்டு விசேஷங்கள் வரைக்கும் நிரம்பி இருந்த காலம் அது.

வாழ்வில் எப்பேர்ப்பட்ட துன்பங்கள், வறுமை என்று கொடுமைகளை அனுபவித்தவராயினும் சென்னை வந்து விட்டால் அவன் பிழைத்துக்கொள்வான் என்று சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை என்பது அங்கு வாழும் மக்களைக் காணும்போது தெரியும். ஒரு தலைநகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சென்னையை விட ஒரு சிறந்த உதாரணம் தெரியவில்லை. ஆங்கிலேயர்கள் கட்டமைத்த நகரம் என்பதைத் தாண்டி அங்கே பிறந்து வளர்ந்த மக்களும் மற்றும் அங்கே சென்று குடியமர்ந்த மக்களும் அவர்களின் உழைப்பால் மெருகேற்றிய வளர்ச்சியடைந்த சென்னையைத்தான் இன்று நாம் காண்கின்றோம் என்றால் அது மிகையாகாது.
பல்வேறு தொழிற்சாலைகள், மண்டல அலுவலகங்கள், பெரிய பெரிய ஹோட்டல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள், சினிமா தயாரிக்கும் கம்பெனிகள் இப்படி நிறைய நிறுவனங்கள் பலதரப்பட்ட மக்களுக்கு வேலை அளித்து வருகின்றன.
இப்படிப்பட்ட சென்னை பழிகளையும் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. ஊரென்றால் கோவில் மற்றும் ஓர் ஆறு இருக்க வேண்டும் என்று அந்நாளில் பெரியோர் சொல்வார்கள். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்த சென்னையில் கூவம் என்றொரு ஆறு இருந்து அதன் புகழுக்குக் கேடு விளைவிக்கிறதே என்று பலர் சொல்வதை நான் அறிவேன்.
ஊரும், இயற்கையும் நமக்கு அளித்த வளத்தினை, நம் வசதிக்காக அதன் செல்வத்தை அழித்து அதன் அழகை என்றும் நீர் பாய்ந்தோடிய அதன் உருவத்தினைக் கெடுத்த பாவம் அதில் வாழும் நம்மைத்தான் சாரும் என்பது நம் அறிவிற்கு எட்டாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது. சென்னையில் இருந்தால் நமக்கு நேரத்தின் அருமை புரிய வரும். மக்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் பேருந்து மற்றும் ரயில்களில் இருக்கும் இருக்கைகளின் அருமை புரியும்.
சிலருக்கு நம் ஊரில் வாழும் பொழுது கிடைத்த அமைதி, மகிழ்ச்சி இவை எல்லாம் இங்கு கிடைக்காமல் வெறும் இயந்திரமாக வாழ்கின்றோம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி வேலை, பணம், கல்வி முதலியவற்றை அனுபவிக்கும் பொழுது சென்னையை விட்டு கொஞ்ச நாட்கள் விடுமுறைக்கென்று ஊருக்குச் சென்றாலும் நம் மனம் இங்கேயே திரும்ப வந்துவிடத் தோன்ற வைக்கும் என்றால் அது மிகையாகாது.
என்னைப்பொறுத்தவரை சென்னையில் இருந்த ஆண்டுகள் குறைவு என்றாலும் சென்னையில் வசித்து சென்னையின் பிரம்மாண்டத்தைப் பார்த்துணர்ந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் இன்றைக்கு நான் எந்த மாநகருக்குச் சென்றாலும் அது எனக்கு எளிதாக இருப்பதற்குக் காரணமாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி, சென்னை என் வாழ்வில் ஒன்றிப்போனதன் காரணமாக நான் என்றென்றும் சென்னைக்குக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறுவதற்குப் பெருமைப்படுகிறேன். சென்னையின் பெருமையையும் அதன் அருமையையும் இக்கட்டுரையின் வாயிலாக என்னைச் சொல்ல வைத்த விகடனுக்கு என் நன்றிகள்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!