செய்திகள் :

`கடிதங்கள் எழுதிய அந்த நாள்கள் இனிய நினைவுகளால் நிரம்பியவை' - Post Box குறித்த நெகிழ்ச்சி பகிர்வுகள்

post image

`தபால் பெட்டி சேவை நிறைவு'

2025 ஜூலை மாதம், இந்திய தபால் துறையின் முக்கியமான அறிவிப்பொன்று செய்திகள் வாயிலாக பரவியது. "மிக விரைவில், பெரும்பாலான தபால் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கப்படவுள்ளன; தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாததால் அவை இனி பயன்படுத்தப்பட மாட்டாது" என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு, பலர் மனதில் ஆழமான நினைவுகளையும், ஏக்கங்களையும் கிளப்பியது. ஒரு காலத்தில் இந்த தபால் பெட்டிகள் மூலம் காதலும், குடும்பமும், உறவுகளும் இணையப்பட்டிருந்தன.

இந்த கட்டுரையில், தங்கள் சிறுவயதில் தபால் பெட்டியை பயன்படுத்தியவர்களின் உணர்வுபூர்வமான அனுபவங்களையும், அந்த பெட்டியின் பின்னாலுள்ள நினைவுகளையும் பதிவு செய்கிறோம்.

1970-களில் இருந்து 1990-கள் வரை, தொழில்நுட்பம் இல்லை என்றாலும், தபால் பெட்டியே மக்களின் தொடர்புகளுக்கு பாலமாக இருந்தது.

அன்பும், ஆசையும், ஏக்கமும் அடங்கிய கடிதங்கள் அந்த பெட்டியில் விழும் ஒவ்வொரு சத்தமும் ஒரு கனிவான குரலாக இருந்தது. உறவுகளும் காதலும் தூரத்தில் இருந்தாலும், தபால் நிலையம் மனங்களைக் இணைத்து வைத்த மையமாக இருந்தது.

விடுதியில் வீட்டுக்கு எழுதிய கடிதம்

குல்கர்ணி

“நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது, குடும்பப் பிரச்னைகளால் என் பெற்றோர் என்னை நான் படித்து வந்த பள்ளியின் விடுதிக்கு அனுப்ப முடிவு செய்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பு முடியும் வரை விடுதியில் தங்கி படித்தேன். அந்தக் காலத்தில் பெற்றோர்களுடன் பேசுவதற்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரே ஒரு ரூபாய் நாணயத்தில் ஒரு நிமிடம் மட்டுமே பேசக்கூடிய தொலைபேசி வசதி இருந்தது, அது எனக்கு போதவில்லை.

ஆனால் பள்ளி நிர்வாகம் அஞ்சல் வழியாக கடிதம் எழுதும் வாய்ப்பை அளித்தது. அதை நான் முழுமையாகப் பயன்படுத்தினேன். நீல நிறத்தில் இருந்த இன்லந்து கடிதத்தில் என் பெற்றோருக்கு எழுதினேன்- என்னுடைய உணர்வுகள், ஆசைகள், சின்ன சின்ன சம்பவங்கள் அனைத்தையும் வார்த்தைகளாக எழுதி, அதை மடித்து ஒட்டிக்கொடுத்து அனுப்பினேன். அந்த அனுபவம் என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாதது. அந்த நேரங்களில் வாழ்க்கை மெதுவாகவும் அழகாகவும் ஓடியது.

இப்போது போல் ஒவ்வொன்றையும் உடனே பேசிவிடும் தொலைபேசி வசதி இல்லாததால், உணர்வுகளை சொல்ல மனதுக்குள் நிறைய நேரம் கொடுத்து, நன்கு எண்ணிச் சொல்லும் பழக்கம் இருந்தது.

Post Box

ஒவ்வொரு வாரமும் விடுதிக்கு அஞ்சல்காரர் வருவார். பெற்றோர்களிடம் இருந்து வந்த கடிதங்களை தருவார்; நாங்கள் எழுதிய கடிதங்களை வாங்கிச் செல்வார். அந்தக் கடிதங்களை எதிர்பார்த்து காத்திருக்கும்போது ஏற்பட்ட உணர்வுகள் இன்று நினைத்தாலும் என் கண்கள் ஈரமாகின்றன.

இப்போது என் வயது 29, ஆனால் 13–14 வயதில் அந்தக் கடிதங்களை எழுதிய நாள்கள் என் மனதில் இன்று வரைக்கும் தெளிவாகவே இருக்கின்றன. இன்று எல்லாம் டெக்னாலஜி வந்துவிட்டது; கைபேசியில் சில வினாடிகளில் நாம் நினைப்பதை உடனே சொல்லிவிடலாம். ஆனாலும், அப்போது மனதைக் கோர்த்து எழுதும் அந்த கடிதங்கள், அதற்கேற்ற ஆழமான உணர்வுகள், மெதுவாக ஓடிய வாழ்க்கை - இவை அனைத்தும் என் வாழ்நாளின் அழகான நினைவுகளாகவே நெஞ்சில் நிறைந்திருக்கின்றன” என்றார் ஷில்பா குல்கர்ணி.

பட்டாளத்தில் இருந்து மனைவிக்கு எழுதிய கடிதம்

“அந்த காலத்தில் ராணுவ படையில் சேருவது பெரிய விஷயமில்லை. நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் என் ஊரான ராமநாதபுரத்தில் ஒரு தேர்வு போட்டி நடத்தப்பட்டது. அதில் ஓடி, ஒரு வெள்ளை கோட்டை தாண்டினால் படையில் சேர்வதற்கான தகுதி கிடைக்கும். நான் வேகமாக ஓடி அந்த கோட்டை தாண்டினேன், அதனால் படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். தமிழ்நாட்டில் படையை `பட்டாளம்' என்று சொல்வார்கள், அதனால் என்னைப் “பட்டாளத்துக்காரன்” அல்லது “மிலிட்டரிகாரன்” என்று அழைக்கத் தொடங்கினர்.

எனக்கு 21 வயதானதும், என் பெற்றோர், உறவினரின் மகளை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்துக்குப் பிறகு உடனே என்னை காஷ்மீருக்கு அழைத்தார்கள், அதனால் திருமணத்தின் ஆரம்ப நாள்களில் என் மனைவியுடன் நேரம் கழிப்பதற்கே முடியாமல் போய்விட்டது.

அப்போது தொலைபேசிகளோ, மொபைல்போன்களோ கிடையாது; காதலை பகிர்வதற்கு வழி என்னவென்றால் கடிதங்கள் தான். நான் காஷ்மீரில் இருந்து ஹீர்டின் போட்ட கார்டுகள், பரிசுகள், அஞ்சல்களைக் கொண்டு அவளுக்கு அனுப்புவேன். என் மனைவியும் அருமையாக எழுதுவாள். காஷ்மீரில் நான் இருக்கும் போது தபால்காரர் அவளுடைய கடிதத்தை கொண்டு வந்தால் நான் குதித்து மகிழ்ந்து, அந்தக் கடிதங்களை என் படுக்கையின் கீழ் பாதுகாப்பாக வைத்துவிடுவேன்.

இன்று என் மனைவியின் ஊரான மதுரையில் நான் ஒரு டைலர் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். என் மனைவியும் டைலர் தான்."தபால் பெட்டி பற்றி உங்களுக்கு வந்த உணர்வு என்ன?" என்று நீங்கள் கேட்டபோது, எனக்கு காஷ்மீரில் இருந்த என் காலங்கள் முழுமையாக நினைவில் மின்னும். அந்த நாள்கள் காதலால், ஏக்கத்தால், இனிய நினைவுகளால் நிரம்பியவை” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

காதல் கடிதம்

“வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலிப்பதே பெரிய தடை. ஆனா நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம். கடைசில கல்யாணமும் செஞ்சுக்கிட்டோம்! எப்படி சாத்தியம்னா, நாங்கள் கடிதம் எழுதி எங்களோட உணர்ச்சிகளைப் பகிர்ந்ததால்தான். எங்களுக்குள்ள கடிதங்களை பறந்துகிட்டே இருந்தது, ஆனா இருவரும் ஒருமுறை கூட ஒருவருடைய பெற்றோரிடமும் மாட்டிக்கல. கடைசில எங்களோட லவ் தெரிஞ்சதும், "இந்த கல்யாணத்த நடத்த முடியாது, சமூகத்தில ஒத்துக்கல"ன்னு ஒரே போராட்டம். ஆனா நாங்க விடல. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

நாங்க சந்தோஷமா வாழ்றோம், நல்லா ஒரு ஹோட்டலும் நடத்துறோம். அது வரைக்கும் அனுபவிச்ச சிக்கல்கள், நானும் அவரும் எங்கப்பா அம்மாவுக்கு தெரியாம தபால் கார்டு போடுறது எல்லாம் சின்ன திருட்டுத்தனமான காதல் தருணங்கள் ரொம்பவே ரகசியமா இருந்துச்சு. எங்களோட காதலும், கல்யாணமும் சேர, முக்கிய காரணம் ஒரு தபால் கார்டு தான்” என்று வெட்கப்பட்டு சிரிக்கிறார் தனலட்சுமியும் அவர் கணவர் கணேசும்.

`தபால் பெட்டிக்குள்ள இருந்து வந்த பத்திரிகைகள்'

“நான் சிறுமையாக இருந்த காலத்தில், குறிப்பாக 1990 மற்றும் 2000-களில், விகடன், குங்குமம், குமுதம், இந்தியா டுடே,போன்ற பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. நான் பெரும்பாலும் ஆங்கிலத்தில் படிப்பதைக் கைவிடாதவள். அதனால்தான் என் ஊரில் என் தபால்காரர், “இங்கிலிஷ் டீச்சர் ”ன்னு பெருமையா சொல்லுவாரு. இந்தியா டுடே பத்திரிகைக்கு, அரசியல், சினிமா, சமையல், மக்களின் பார்வை ஆகியவைகளைப் பற்றி என் கருத்துகளை எழுதி அனுப்புவேன். இப்போது நான் 50 வயதாக இருக்கிறேன்.

ஆனாலும் என் 20, 30-களில் என் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதியாக தபாலில் வந்த பத்திரிகைகள் இருந்தன. இன்றும் புத்தகங்களும் நாவல்களும் வாசிக்கிறேன். ஆனாலும், அந்த தபால் பெட்டிக்குள்ள இருந்து வந்த பத்திரிகைகளுக்குள்ள மணமும், உணர்வும் என் மனசுக்குள்ள இன்னும் உயிரோட இருக்கின்றன. இப்போது அந்த தபால் பெட்டி சேவை நிறைவு பெறப்போறதுனு கேட்கும்போது, ஒரு வருத்தம்” என்று சோகத்துடன் அவருடைய அனுபவத்தை பகிர்கிறார் ஹம்சவல்லி.

பண்டிகை காலங்களில் தபால் நிலையம்

“மதுரையில், வடபழஞ்சியில் நான் கடந்த 30 ஆண்டுகளாக ஹோட்டல் கடை நடத்தி வருகிறேன். என் வீடு தபால் நிலையத்துக்கு அருகில்தான் இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்னால், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற எல்லா பண்டிகைகளுக்கும் தபால் நிலையம் நிறைய அஞ்சல் மூட்டை மூட்டைகளாக குமிழ்ந்திருக்கும்.

வாழ்த்துகள், அன்பு கடிதங்கள், தபால் அட்டைகள் அனைத்தும் மக்களிடையே உன்னதமான தொடர்பை காட்டியது. ஆனா இப்போது பண்டிகைன்னா கடைகள்ல கூட்டம் இருக்கலாம், ஆனா தபால் நிலையத்துல அந்த மாதிரியான கடிதங்களின் அலைமோதுவதை காணவே முடியல. என் வாழ்வில் தபால் பெட்டியும் தபால் நிலையமும் இணைந்த ஒரு அன்பான நினைவாகவே இருக்கு” என்று நெகிழ்கிறார் பாண்டி.

கஃபேக்களில் மட்டும் கிடைக்கும் வைஃபை - மொபைல் இணைய வசதியில்லாத நாடு பற்றி தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில், இணையம் இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பது பலருக்கு கற்பனை செய்ய முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த மொபைல் இணைய வசதி, சமூக ஊடகங்கள் மற்றும் ஏடிஎம் வசதிகள் இல்லாத ஒரு விசித்திரமான நாடு... மேலும் பார்க்க

``நாலைஞ்சு தலைமுறையா பாதையோர வாசிதான்'' - கானா பாடகர் மெட்ராஸ் மிரன்

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகள் என்னென்ன என்ற கேள்விக்கு, உணவு, உடை, இருப்பிடம் என பள்ளிக்கூடத்தில் பதிலளித்திருப்போம். ஆனால், அவை பல தலைமுறைகளாக கிடைக்கப்பெறாத மக்களும் நமக்கு நடுவே பாதையோரங்களில் வாழ்... மேலும் பார்க்க

விமானப் பயணத்தில் செல்போனை Airplane Modeல் வைப்பது ஏன் அவசியம்? விமானியின் விளக்கம்

விமானப் பயணத்தின்போது செல்போன்களை ஏரோபிளேன் மோடில் வைப்பது மிகவும் முக்கியமானது என ஒரு விமானி தெளிவாக விளக்கியுள்ளார். விமானி ஒருவர் டிக்டாக்கில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார். சொல்போனை ஏரோபிளேன்... மேலும் பார்க்க

எல்லோர் மனதிலும் பரவச அலைகளை ஏற்படுத்திய சதாபிஷேக கல்யாணம்! | #ஆஹாகல்யாணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரமாண்ட தூண், கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை.. |Photo Album

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் அரண்மனைஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் அரண்மனை மேலும் பார்க்க