இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?
உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாத வல்லரசாக இந்தியா மாறும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் ரைசன் என்ற பகுதியில் ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அதனை சிலர் விரும்புவதில்லை; அவர்களால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. எல்லோருக்கும் முதலாளி என்று தன்னை நினைக்கும் சிலர், இந்தியாவின் வேகமான வளர்ச்சி பற்றி யோசிக்கின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் விலையை அதிகமானதாக மாற்ற முயற்சிக்கும் சிலர், விலையேறினால் இந்திய பொருள்களை மற்றைய உலக நாடுகள் வாங்குவதை நிறுத்தும் என்று கருதுகின்றனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், இந்தியா தொடர்ந்து வேகமாக முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது. உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாத ஒரு வல்லரசாக இந்தியா மாறும்.
தற்போதைய நிலையால், பாதுகாப்புத் துறைசார்ந்த ஏற்றுமதிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 24 நாடுகளுக்கு பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்து இந்தியா அனுப்பி வைக்கிறது. இதுதான் இந்தியாவின் வலிமை. இந்தியா ரூ. 24,000 கோடிக்குமேல் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.
இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த நிலையில், அதனைக் குறிப்பிட்டுத்தான் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாகத் தெரிகிறது என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவுகின்றன.