உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி
உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச்சரிவில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 705 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.
மலைப்பிரதேசமான உத்தரகண்டில் இயற்கை பேரிடரால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த இயற்கை பேரிடரில் மாநிலத்திற்கான பொருளாதார இழப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
உத்தரகண்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 705 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதேகாலகட்டத்தில், ஒட்டுமொத்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 3500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல்வேறு காலகட்டத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நிலச்சரிவால் மட்டும் 316 பலியும், மேக வெடிப்பு போன்ற அசாதாரண வெள்ளத்தில் சிக்கி 389 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதி தீவிரமான வானிலை சார்ந்த நிகழ்வுகளால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உத்தரகண்ட் முக்கியமான இடத்தில் உள்ளதை இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வானிலை தரவுகளின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வானிலை சார்ந்த நிகழ்வுகளின் அதி தீவிர பாதிப்பு, 140 முறை பதிவாகியுள்ளது. இவை பெரும்பாலும், 30°– 31° வடக்கு அட்சரேகையிலும், 79°– 80.5° கிழக்கு தீர்க்கரேகையிலும் பதிவாகியுள்ளன.
உத்தரகண்டில் ருத்ரபிரயாக் மற்றும் பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்கள் அதி தீவிர வானிலை சார்ந்த பாதிப்புகளுக்கான ஹாட்ஸ்பாட்டாக கருதப்படுகிறது.
1998 முதல் 2009 வரை இப்பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த மழைப்பொழிவும், வெப்ப நிலை அதிகரிப்பும் இருந்துள்ளது. ஆனால், 2010க்கு பிறகு அதற்கு நேர்மாறாக அதிக மேக வெடிப்புகளும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிக்க |இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?