ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள்: கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளாலே முடக்கம்...
ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி : 1950களில் என் மெட்ராஸ் வாழ்க்கை| #Chennaidays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சென்னையில் நான் 1945-ல் பிறந்தேன். அப்போதைய மெட்ராஸ் நகர வாழ்க்கையே வித்தியாசமாய் இருந்தது. நல்ல காற்றோட்டம், வீட்டிலேயே சமைத்த பல விதமான
தின்பண்டங்கள். நண்பர்களுடன் விளையாட்டு என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன.
ரிப்பன் மாளிகைக்கு எதிரே உள்ள கற்பூர முதலி தெருவில்தான் எங்கள் வீடு இருந்தது. எங்கள் தாத்தா காலத்து வீடு அது. தொடர்ந்து மழை பெய்தால், வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடும். வந்த தண்ணீர் விலக சுமார் 2 நாட்கள்கூட ஆகிவிடும். அவ்வளவு பழமையான வீடு அது.
தோல் சம்மந்தமான அனைத்து பொருட்களுக்கும் சிறந்த இடம் அது.
பெரியமேடு என்ற அந்த இடத்தில்தான் முஸ்லிம்கள் அதிகம் வசித்தார்கள். இன்றும் அவர்கள்தான் அங்கு அதிகம் இருக்கிறார்கள்.
முதலில் நான் சேர்ந்து படித்த திண்ணைப் பள்ளிக்கூடம் அதே
தெருவில்தான் இருந்தது. சுமார் 10 மாணவர்கள் மட்டுமே அங்கு படித்தோம்.
தனிப்பட்ட வகுப்புகள் இல்லை; எல்லோருக்கும் ஒரே மாதிரியான
பாடத்திட்டம்தான். பள்ளியை நடத்தியவர் என் மாமாதான்.
உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நித்தியானந்தம் என்ற பெயர் கொண்டவர். குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்துக்காக அடிக்கடி கோர்ட்டுக்குப் போய்விடுவார்.
சில வருடங்களுக்குப் பிறகு, அவரே எங்கள் அனைவரையும்,
சிந்தாதரிப்பேட்டையில் இருந்த பிறைமரிப் பள்ளியில் சேர்த்துவிட்டார்.
5-ம் வகுப்பு வரை அங்கே படித்த பிறகு, உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு வரை படித்தேன். 10-ம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதுவதற்கு முன்னால், பள்ளியில் ஒரு தேர்வு நடத்துவார்கள். அதில் தேர்ச்சி பெற்றால்
மட்டுமே, பொதுத்தேர்வுக்கு அனுமதிப்பார்கள்.

மாணவர்கள் அனைவருமே தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், அப்போதைய தலைமை ஆசிரியர் திரு பத்மநாபன் அவர்கள், மாணவர்களின் வீடுகளுக்கு, நேரில் சென்று, பெற்றோர்களிடம், மாணவர்களின்
படிப்புக்கு உதவுமாறு, கேட்டுக் கொண்டார். படிப்பு அப்போதெல்லாம் தெய்வீகமாக மதிக்கப்பட்டது.
அப்போதைய கல்வி அமைச்சர் திரு சி.சுப்பிரமணியன் அவர்கள். குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தினருக்கு இலவச கல்வி கிடைத்தது. பாட புத்தகங்களை வாங்காமல், கோனார் நோட்ஸ் மட்டுமே வாங்கி படித்தவன் நான். உறவினர் ஒருவர் நோட்டுக்களை இலவசமாக தந்து உதவினார்.
எங்கள் பகுதியில் வாழ்ந்த வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஹோட்டல் தொழிலை சிறப்பாக நடத்தினார்கள், விலையோ குறைவு; தரமோ அதிகம். உணவுகள் அனைத்தும் அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்டவை. ஹோட்டலில் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
மளிகை கடையில் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்தான். முழு தேங்காய் விலை நாலணா. ஹமாம் சோப்பு 3 ரூபாய்தான். 3 படி கல் உப்பு ஒரு ரூபாய்.
பிறந்த நாள் விழாக்கள் எல்லாம் அப்போது இல்லை. போட்டிருக்கும் ஆடை கிழிந்தாள் மட்டுமே, புதிதாய் வாங்கித் தருவார்கள். வேலை தேடித்தரும் அலுவலகம் மூலம்தான் எனக்கு மத்திய அரசுப் பணி கிடைத்தது. பின்னர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சேர்ந்து, 40 வருடங்கள் வரை பணியாற்றிவிட்டு, இப்போது ஓய்வில் இருக்கிறேன். பழைய
வாழ்க்கையை என்றுமே என்னால் மறக்க முடியாது.
-சி.பி.ராஜு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!