‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!
பள்ளிப் பருவத்தில் தொடங்கிய வாசிப்பு! - பத்திரிகை அல்ல, என் குடும்பம்| #நானும்விகடனும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவை விகடனும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன்.
பூஜை அறையில் உள்ள தேக்கு மரப்பெட்டியில் . விகடனில் வந்த தொடர்கள் பைண்ட் செய்யப்பட்டும், தீபாவளி சிறப்பு மலர்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த மரப்பெட்டியை பெரிய பூட்டு போட்டு பூட்டி வைத்திருப்பார்.அம்மா. (புத்தகத்தைப் பூச்சி அரித்து விடக்கூடாது என்பதற்காக பெட்டியில் வேப்பிலைகளையும் ,நொச்சி இலைகளையும் போட்டிருப்பார் .இதனால் அந்தப் பெட்டியை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் வரும் வாசம்ஒரு சுகானுபவத்தைத்தரும்.)
எட்டாம் வகுப்பு விடுமுறை அம்மாவிடம் அனுமதி வாங்கி பெட்டியை திறந்து கையில் எடுத்தது விகடனின் தீபாவளி சிறப்பு மலர். கோபுலுவின் கைவண்ண அட்டைப்படம். பக்கத்திற்கு பக்கம் நகைச்சுவைத்துணுக்குகள்.

படிக்க ரசிக்க நினைத்து மகிழ நிறைய கவிதைகள் கட்டுரைகள் சுவாரசியத்திற்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல்...அந்த வயதில் சிலது புரியவில்லை என்றாலும் கூட படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.
(சில்பியின் தூரிகையில் உருவான சுவாமி ஓவியங்கள்எங்கவீட்டு பூஜை அறையை அலங்கரித்திருந்தது அப்போதுதான் புரிந்தது.
வளரிளம் பருவம் வாசிப்பை நேசிக்கத் தொடங்கிய நேரம் ... பைண்ட் செய்து வைத்திருந்த தொடர்கதைகளை படிக்க ஆரம்பித்தேன்.
பத்தாம் வகுப்பு .. ஜூனியர் விகடனின் அறிமுகம் . ஆரம்பமே அதகளம் அரசியல்கட்டுரைகள்...செமக்ரிஸ்பா..அந்த வாசிப்பு பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் போது குறிப்பு எடுக்க துணைச் செய்தது.
நான் முதன் முதலில் பத்திரிகையில் வரும்போதே சுடச்சுட படித்த ஒரு தொடர் மதன் அவர்களின் 'வந்தார்கள் வென்றார்கள்'வரலாற்றுத் தொடர்
முகலாய சரித்திரத்தைச் சொன்ன விதம் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நேரில் இருந்து பார்த்தது போல் எழுதிய விதம்... இப்படி கூட ஒருவரால் ரசித்து எழுத முடியுமா? ன்னு தோன்ற வைத்தது. (இதன் காரணமாகவே +1 லவ் வரலாறு பிரிவு எடுத்தது தனிக்கதை)
அப்பத்தான் காதலை வேறு விதமாகச் சொல்லிய சுஜாதாவின்'பிரிவோம் சந்திப்போம்' தொடரை படிக்க நேர்ந்தது. மதுமிதாவும் ,ராதாகிஷனும் இன்னமும். கண்ணுக்குள்ளே ..
இதே நேரம் 'என் இனிய எந்திரா'வும் தொடராகவந்தது. 'ஜீனோ' நாய் .. புசுபுசுன்னு அழகா.
அதன் இரண்டாம் பாகம் ' மீண்டும் ஜினோ' கல்லூரிக்காலத்தில் வந்தது வகுப்பறையில் பேராசிரியர் எர்னெஸ்ட் ராஜா நுழைந்ததை பாராமல் தோழிகளுக்கு நேற்று படித்த கதைச் சொல்ல... ஆசிரியர் திட்ட ...மன்னிப்பு கேட்டது நினைவலைகளில்...
அதே காலகட்டத்தில் 'காதலைச் செதுக்கி காதலர்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்ட பட்டுக்கோட்டை பிரபாகரனின் 'தொட்டால் தொடரும்' தொடர்கதை விகடனில்...
கல்லூரி காலங்களில் அவரின் எழுத்துகளுக்கு நான் பரமவிசிறி. (பரத் சுசிலாவை மறக்கமுடியுமா? 80 ஸ் வாசகர்கள் கேட்பது காதுகளில் விழுகிறது இன்று சுசிலாவின் பனியனில் என்ன வாசகம் இடம் பெற்றிருக்கும் என்று ஆராய்வதில் தோழிகளுக்குள் பெரிய விவாதமே நடக்கும். எப்போதடா ஆனந்த விகடன் வரும் எப்போதடா அந்த தொடர்கதை படிப்போம் என்று காத்திருந்த காலம் குப்தர்களின் பொற்காலம் போல அற்புதமானது.
அதில் அவர் இது 'காதல் கதை என்று சொல்வதை விட காதலைப் பற்றின கதை 'என்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் , வயது, அந்தஸ்து, தரம், பதவி என்று எந்த வித்தியாசமுமின்றி பொதுமக்களோடு ஐக்கியமாகியுள்ள விஷயங்களில் முக்கியமானது காதல் என்றும் எழுதியது புரிந்தும் புரியாதது போல் இருந்தது.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முதலிலும் ஒரு க்யூட்டான quotes... இடம் பெற்றிருக்கும். (அப்போதெல்லாம் கடிதங்கள் வரையும் போது இதை உபயோகப்படுத்தியே எழுதுவேன் ) இப்போதும் நினைவில் இருக்கும் சில quotes...
காதல் என்பது ...சினிமா தியேட்டரில் அமர்ந்து கொண்டு பக்கத்து இருக்கையின் முகத்தையே பார்ப்பது. காதல் என்பது... ஒரு மணி நேரம் போனில் பேசுவது- விஷயமே இல்லாமல். காதல் என்பது... கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் நடுவில் கொஞ்சமாக உறங்குவது!... இப்படி நிறைய எழுதிக் கொண்டே போகலாம் . வசந்தியும் ஸ்ரீராமும் இன்னமும் மனதுக்குள் இளமையாக வாழ்கின்றார்கள்.
அழகான நாஸ்டால்ஜியா.
பிறகு திருமணம்.. புகுந்த வீட்டிலும் அனைவரும் புத்தகப் பிரியர்கள். வாழ்க்கை இனிமையானது... எந்த அளவுக்கு என்றால் தினமும் ஒரு மணி நேரம் நானும் எனது மாமாவும் விகடனில் வந்த தொடர்களை பற்றி விவாதிக்கிற அளவுக்கு.

அந்த நேரத்தில் குறிஞ்சி பூவாய் 'அவள் விகடன்' மலர்ந்தது. (மலர்ந்தது முதலே அதன் நறுமணத்தில் மயங்கியதெல்லாம் தனி பதிவாய் போடலாம்.) அதிலும் தொடர்கள், கட்டுரைகள் ரமணிச்சந்திரனின் தொடர் கதைகள் என ஏராளம்.
சுவாமி சுகபோதானந்தாவின்
"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் " தொடர் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தது. சூழ்நிலை மனநிலை எதுவாக இருந்தாலும் மற்றவரிடம் பேசும்போது இனிமையான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அன்போடு பேசுவதன் மூலம் உறவுகள், நட்புகள் பலம் பெறும் என்பதை உணர்த்தியது.
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி மனசோர்வில் இருந்து விடுபடுவது எப்படி என சராசரி மனிதர்களின் மனதில் தோன்றும் பல 'எப்படி'களுக்கு அழகாக எளிமையாக பதில் சொல்லியது.
ஜூவியில் வந்த காதல் படிக்கட்டுகள் தொடர்... காதல் இளைஞர்களுக்கான உணர்வு மட்டும் அல்ல என்ற உண்மையை பட்டவர்த்தனமாக சொல்லிய விதம் அழகுன்னா .. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரபலங்கள் காதல் பற்றிய தன் அனுபவங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட விதம் பேரழகு...காதல்என்ற மூன்று எழுத்துகளுக்கு பின்னால் எவ்வளவு சுவையான விதவிதமான அனுபவங்கள்.
இதைப் படிப்பதற்காகவே காலையில் வெகுவேகமாக சமையலை செய்து முடித்து சமையலறையை சுத்தம் செய்தது ஒரு காலம்...)(சொல்ல மறந்துட்டேனே நிறைய பேர் எழுதி இருந்தாலும் அதில் ரகுவரன், பிரகாஷ்ராஜ் எழுதியது பிடித்திருந்தது .. காரணம் தெரியவில்லை. )(கலைஞர் நிறைவு செய்தவிதம்... கட்டுரைக்கே முத்தாய்ப்பாய்)

குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை நவீன தமிழ் நடையில் அனுபவ கட்டுரைகளாக செதுக்கியிருந்த நா முத்துக்குமார் அவர்களின் 'அணிலாடும் முன்றில் !'தொடர்... குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை அழகாய் எடுத்துரைத்தது.(இன்று நான் பேசும் பல மேடைகளில் இவரின் இந்த தொடரிலிருந்து பிடித்த பகுதியை கோடிட்டு காட்ட மறந்ததே இல்லை...)
இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் என்னை ஆட்கொண்ட விகடனில்.. எழுதும் ஆசை வர முதலில் கடிதங்கள் போட்டேன். பிரசுரமாகலை.' விக்ரமாதித்தனும் வேதாளமும்' போல விடாமல் முயற்சிக்க ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு வெள்ளியன்று இதழில் பிரசுரம் ஆகியது .
'ஆதிரை வேணுகோபால்'என்ற பெயரை(காலங்கார்த்தால) அச்சில் பார்த்த போது 'ஆயிரம் மத்தாப்பூ'கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியது .(அன்னைக்கு சம்பந்தமே இல்லாமல் சேமியா கீர் செய்து கொண்டாடியது கூட இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.)
பிறகுஅவளில்.. சக்தி விகடனில் ஆன்மீக அனுபவங்கள், டிப்ஸ்... அனுபவங்கள் பேசுகின்றன, சமையல் குறிப்புகள் குட்டி குட்டிக் கட்டுரைகள் ,ஸ்லோகன் போட்டிகளில் வெற்றிபெற என எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில் விகடனில் என் பெயர் பிரசுரமாகிக்கொண்டே இருந்தது.
அதேசமயம் இப்படி தொடர்களைப் படித்ததனால் தானோ என்னவோ எப்படியாவது நாமும் விகடனில் தொடர் எழுதணும் ன்ற என்ற ஆசையும் எழுந்தது. நியாயமான ஆசை நிச்சயம் நிறைவேறுமல்லவா! ஆம் அவள் விகடனில் 'சோயா கொண்டாட்டம்' 'என்ற தொடரை முதன்முதலாக எழுதினேன்.
ஒவ்வொரு இதழிலும் என் புகைப்படம் மற்றும் பெயர் வந்தபோது...இசைஞானி தன் ஹார்மோனியத்தால் எனக்கே எனக்காக மெட்டு போட்டு பாடினார்.
அது மட்டுமல்லாமல்
அவள் விகடனின் 32 பக்க இணைப்பில் 25 புத்தகங்கள்... ஆச்சி மசாலாவின் மகுடம் சூடவா! போட்டிகளுக்கு நடுவர்...என்று 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஆதிரை' ன்னு என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்ட தருணங்கள் அழகு.
இப்படியாக என் பயணம் தொடர்ந்தது. இப்பவும் தொடர்கிறது.
வளவனூர் என்னும் சின்ன ஊரில் பிறந்த என்னை ஓரளவுக்கு பத்திரிகை உலகில் தெரிய வைத்த பெருமை விகடனையேச் சாரும்.
என் உயிர் உள்ளவரை விகடனை மறவேன்.
கொரோனா காலக்கட்டத்தில்
' மை விகடனில்' எழுதும் சந்தர்ப்பம் அமைய... விதவிதமான தலைப்புகளில் கட்டுரைகளை விகடன் பிரசுரிக்க .. எந்தெந்த நாடுகளில் இருந்தோ படிக்கும் பலரும் அதை விமர்சனம் செய்ய... இதற்கெல்லாம்..என்ன தவம் செய்தேனோ! என்றே தோன்றும்.
சினிமாவைக் காதலிக்கும் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசைப்படுவர். பார்த்தும் இருப்பர். நானும் அப்படித்தான். Hero entry.. டிக்கெட்டுகளை திரையில் கிழித்து பறக்க விட்டிருக்கிறேன். பிடித்த இயக்குனர் பெயர் திரையில் வருகையில் விசில் அடித்து கைத்தட்டி இருக்கிறேன்.
ஆனால்,ஒரு சாதாரண மனிதனால் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு சிறப்பு திரையிடல் காட்சியின் மூலம் (மனதிற்கு பிடித்த இயக்குனருடன் உரையாடிக் கொண்டே) படம் பார்க்க முடியுமா?
எவ்வளவு பெரிய விஷயமது . எத்தனை பேருக்கு சாத்தியமாகும்? இதெல்லாம் கனவில் மட்டுமே நிகழும் . நிஜத்தில் நிகழாதுன்னு.நினைத்து. ஏங்கிய நாட்கள் எத்தனையோ.(Cinema is the secret of my energy)
ஆனால் சாதாரண வாசகரின் நியாயமான ஆசையை நிச்சயம் விகடன் நிறைவேற்றும் என்பதை மீண்டும் ஒரு முறை' மை விகடன்' நிரூபித்தது .
ஆம் "'பெற்றோர்களுக்கு பிள்ளைகளும், பிள்ளைகளுக்கு பெற்றோர்களும்" ஒரு நெகிழ்வான கடிதம் எழுதியதில் என் கடிதம் தேர்வாக .. சிறப்பு திரையிடல் காட்சிக்கு அழைப்பு... கூடவே எந்தவித emotionsயும் மிகைப்படுத்தாமல் சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் எடுத்த இயக்குனர் ராம் அவர்களுடன் கலந்துரையாடல்.. சிறகின்றி பறந்தேன்.
மொத்தத்தில் விகடனும் நானும்... 'திருமாலும் ஆண்டாளும் 'போல!
எதையும் எதிர்பார்க்காமல் உன்னதமான அன்பு விகடன் தாத்தாவின் மேல்!
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன். நினையாது ஒருபோதும் இருந்தறியேன் பராபரமே!
'உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகம்' என்கிறார் அமெரிக்க அறிஞர் லாங்ஃ பெலோ அது எந்த அளவுக்கு உண்மை என்பது 'விகடனின்' வாசிப்பில் மூழ்கினால் தான் புரியும்.
எனக்கு வாழ்க்கையில் ஒரே கனவு லட்சியம் என் புத்தகம் விகடன் பிரசுரத்தில் வெளியாக வேண்டுமென்பதே!
நிச்சயம் ஒருநாள் அதுவும் வெளியாகும்ன்ற நம்பிக்கையும் இருக்கிறது.!!
நம்பிக்கைதானே வாழ்க்கை!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!