‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!
காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில இளைஞர் ஒருவர், மாணவியை பின்தொடர்ந்து வந்திருக்கிறார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் மாணவியின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் இளைஞர். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அந்த இளைஞரிடம் ஏன் என் கையைப் பிடிக்கிறீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு ஹெல்ப் என்று மாணவி சத்தம் போட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர், மாணவியை சரமாரியாக தாக்கியதோடு அவரை அருகில் உள்ள முட்புதருக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். பின்னர் மாணவிக்கு சொல்ல முடியாத வகையில் பாலியல் தொல்லைகளை கொடுத்திருக்கிறார் அந்த இளைஞர்.

இந்தச் சமயத்தில் இளைஞருடன் போராடிய மாணவி அவரிடமிருந்து தப்பி ஓடி வந்திருக்கிறார். அதன் பிறகு பள்ளிக்குச் சென்ற மாணவி ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டிருக்கிறார். அப்போது மாணவியின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கண்டுபிடித்த பள்ளி ஆசிரியை, மாணவியை தனியாக அழைத்து விசாரித்திருக்கிறார். விசாரணையில் மாணவி, தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர்மல்க ஆசிரியையிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினரும் கிராம மக்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் மாணவியிடம் விவரங்களை கேட்டறிந்தவர்கள் அந்தப் பகுதியில் தீவிரமாக தேடினர். மாணவி அளித்த தகவலின்படி அந்தப் பகுதியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் வடமாநில இளைஞர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரின் போட்டோவை மாணவியிடம் காண்பித்தபோது இவன்தான் என்னை பேட் டச் செய்தான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அதைக்கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற சிலர், வடமாநில இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த வடமாநில இளைஞரை ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் விசாரித்த போது அவரின் பெயர் சாகித் (35) என்றும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சாகித்தை கைது செய்த போலீஸார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக பெண்கள், மாணவிகளுக்கு வடமாநில இளைஞர்களால் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதை தடுக்க காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அல்லது தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.