சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா ஆகியோர், அண்ணாநகரில் செயல்படும் வங்கி ஒன்றில் Joint NRO Account வைத்திருக்கிறார்கள். அதே வங்கியில் தீனதயாளன் பெயரில் ஒரு NRE Account-ம் மனைவி சித்ரா பெயரில் ஒரு NRE Account-ம் உள்ளன. இந்த மூன்று வங்கி கணக்குகளிலிருந்து தீனதயாளன், சித்ரா ஆகியோரின் அனுமதியின்றி 06.06.2015-ம் தேதி முதல் 06.09.2020-ம் தேதி வரை காசோலை மற்றும் Vouchers-கள் மூலம் 1,43,25,000 ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், பணத்தையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை மத்தியகுற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் விசாரணையை தொடங்கினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அமெரிக்காவில் வசித்து வருகின்ற தீனதயாளன் தினகர் பாண்டியன், சித்ரா தம்பதியின் வங்கி காசோலையில் போலியான கையொப்பமிட்டு, வங்கி அலுவர்களால் மோசடி நடந்திருப்பது செய்தது தெரியவந்தது. மேலும் Fixed deposit -ல் வைத்திருக்கும் பணத்தையும் முறைகேடு செய்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் வங்கியில் கேஷியராக வேலை செய்து வரும் குலோத்துங்கன் (49), தனசேகரன் (41), துணை மேலாளராக பணியாற்றிய வேணுகோபால் (50) ஆகிய மூன்று பேரும் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் வாடிக்கையாளர்களின் பணம் சுமார் 8 கோடி ரூபாயை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.