அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயண...
வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்னை மட்டும் கை விட்டுவிடுமா என்ன? | #Chennaidays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
படிப்பு முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன சென்னை போறியா இல்ல பெங்களூரு போறியா என்று கேட்ட உறவினர்களிடம், நமக்கு எப்போதுமே நம்ம சொந்த ஊரு தானுங்க சொர்க்கம் என்றபடி இருந்த எனக்கு கோயம்புத்தூரில் ஒரு சிறிய கம்பெனியில் வேலை கிடைத்தது.
"இன்ஜினியரிங் முடிச்ச என்ற மவன் சின்ன கம்பெனில கம்மி சம்பளத்துக்கு வேலைக்கு போறானே" என்று பெற்றவர்களுக்கு ஒரு வருத்தம் எப்போதும் இருந்து வந்தது.
காலம் வரும் கண்ணு காத்திரு என்று ஆறுதல் கூறிக்கொண்டு இருந்த எனக்கு மூன்று வருடம் கழித்து ஒரு பெரிய கம்பெனியில் வேலைகிடைத்தது.
ஆனால் சொந்த ஊரான கோயம்புத்தூரில் அல்ல, சென்னையில்.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்னை மட்டும் கை விட்டுவிடுமா என்ன? உடனே வருகிறேன் என்றபடி கிளப்பினேன் சென்னைக்கு.
சென்னை சென்று நண்பர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சென்று நண்பர்களை சந்தித்ததும் காட்டாற்று வெள்ளம் போல் மகிழ்ச்சி பொங்கியது.
மூன்று வருடம் கழித்து சந்தித்ததும் கல்லூரி நினைவுகள் மனதில் ஓடின, விடியும் வரை கல்லூரி கதைகளை பேசி நேரம் போனது அறியாது விடியற்காலை உறங்கினோம். திங்கள் காலை புதிய கம்பெனியில் சேர்வதற்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் சென்று தாம்பரம் (MEPZ ) பேருந்தில் ஏறினேன்.
அப்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது, மிகவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை இடையூர்களால் நான் அலுவலகம் சென்று சேர மூன்று மணிநேரம் ஆனது. புதிய அலுவலகத்தில் சேருவதற்கான நடைமுறைகள் இனிதே நிறைவு பெற்றன.
இரவு என் பயண அனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்தபோது, இதற்கே பிரம்பித்தால் எப்படி, எனது அலுவலகம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்றான் ஒரு நண்பன். எனது அலுவலகம் செங்கல்பட்டு அருகில் இருக்கிறது என்றான் மற்றொருவன். அப்படி என்றால் நான் தான் அலுவலகம் அருகிலேயே இருக்கிறேன் என்று கூறி சிரித்துகொண்டோம்.

அடுத்த நாள் வழக்கம் போல் எங்களது பயணம் தொடங்கியது. என்னிடம் பலரும் கேட்ட கேள்வி, ஏன் அவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறாய், அலுவலகம் அருகில் உனக்கு தங்க ஏதும் இடம் கிடைக்கவில்லையா என்று. அவர்கள் எல்லோரிடமும் நான் கூறும் பதில், தங்கும் இடம் கிடைக்கும் ஆனால் என் நண்பர்கள் அங்கு இருக்கமாட்டார்கள் என்பதுடன். எனக்கு மட்டும் அல்ல, என்னை போல் பலரும் நெடும் தூரம் பயணம் செய்வதன் காரணம் இதுவே.
திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகம் சென்று பணிக்கு செல்வது, வெள்ளி இரவு ஏவிஎம் தியேட்டர் அல்லது கமலா தியேட்டர்களில் நைட் ஷோ படம் பார்ப்பது. சனிக்கிழமை ரங்கநாதன் தெரு அல்லது பெசன்ட் நகர் பீச் செல்வது மற்றும் ஞாயிற்று கிழமை சமையல் செய்து ஒன்றாக சாப்பிடுவது. இதுவே எங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மருந்து.
நாட்கள் செல்ல, சில நண்பர்கள் வெளிநாட்டிருக்கும், சிலர் திருமணமாகி வேறு இடங்களுக்கும் சென்றனர்.
2012 மே மதம் எனக்கும் திருமணம் ஆனது, இல்லறவாழ்வு துவங்க வீடு தேடி சென்ற எனக்கு மேடவாக்கத்தில் single bedroom flat வாடகைக்கு கிடைத்தது. சிறிய வீடாக இருந்தாலும் எங்கள் இருவருக்கு தாராளமாக இருந்தது. எங்களுக்காகவே கட்டிய வீடோ என்று எங்களுக்கு பல நாட்கள் தோன்றியதும் உண்டு. சிலவருடங்கள் கழித்து எனக்கு பணி மாற்றம் கிடைத்து , எங்களது சொந்த ஊரான கோவை வந்துவிட்டோம்.
இரு சிறப்புமிக்க காலங்கள் எனக்கு சென்னையில் அமைந்தன.
இன்றும் சென்னை நாட்களை நினைத்து பார்க்கையில் பசுமையான நினைவுகள் மனதில் படரும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!