போலந்தில் யூஎஃப்ஓ விபத்து? வானில் பறந்து வந்து கீழே விழுந்து வெடித்த மர்ம பொருள்...
காலை / இரவு உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? - நம்பிக்கையும் உண்மையும்
அதிகமாக சாப்பிடுவதால்தான் உடல் பருமன் ஏற்படுகிறதா? ஒரு வேளை உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா?
உடல் பருமன் பற்றிய தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் எஸ்ஆர்எம் மருத்துவமனையின் பொது நல மருத்துவர் மற்றும் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் நந்த குமார்.
தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...
உடல் பருமன் என்பது வாழ்க்கை முறை தேர்வு, அது ஒரு நோய் அல்ல.
உடல் பருமன் என்பது இப்போது உலக சுகாதார அமைப்பு மற்றும் முன்னணி மருத்துவ அமைப்புகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. உடல் பருமன் என்பது அதிகமாக சாப்பிடுவது அல்லது ஒரு நபர் சோம்பேறியாக இருப்பது பற்றியது அல்ல. இருப்பினும் வாழ்க்கை முறையும் முக்கியமானது.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதுபோலவே, உடல் பருமனுக்கும் சிகிச்சை தேவைப்படுகிறது. உடல் பருமனுக்கு ஊட்டச்சத்து சிகிச்சை முறை, உடற்பயிற்சி மற்றும் சில நேரங்களில் மருந்து அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
காலை உணவு அல்லது இரவு உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைக்க உதவுகிறது
உணவைத் தவிர்ப்பதனால் ஒருவர் எடுத்துக்கொள்ளும் கலோரி குறையும் என்று உணரலாம். ஆனால் அதனால் மிகப்பெரிய விளைவுகள் இருக்கின்றன. காலை உணவு அல்லது இரவு உணவைத் தவிர்ப்பது அதிக பசியை ஏற்படுத்துகிறது. இது ஒரு நாளின் மற்ற நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதற்கு அல்லது ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் உணவுகளைச் சாப்பிடுவதற்கு வழிவகுக்குகிறது. உணவைத் தவிர்ப்பது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் குறைக்கிறது. இதனால் உங்கள் உடலில் கொழுப்பு எரிக்கப்படும் திறன் குறைந்துவிடும். குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது சிலருக்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் அதனை பரிந்துரைக்க வேண்டும்.
உடல் பருமன் முன்னோர்களிடமிருந்து(மரபியல்) வருகிறது
உடல் எடை பிரச்னையில் மரபியல் ரீதியான காரணங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் அவை மட்டுமே உடல் பருமனுக்கு காரணம் அல்ல. பெற்றோருக்கு உடல் பருமன் இருந்தால் குழந்தை அந்த பெற்றோரிடமிருந்து அதுசார்ந்த மரபணுக்களைப் பெறலாம். ஆனால் வாழ்க்கை முறையும் ஒரு காரணம்தான். உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம்.
க்ரேஷ் டயட்(crash diet) உடல் எடையைக் குறைக்கும்
க்ரேஷ் டயட் என்பது தீவிர உடல் குறைப்பு. மிகவும் குறுகிய காலத்தில் உணவைக் கடுமையாகக் குறைத்து உடற்பயிற்சி அதிகம் செய்து வேகமாக உடல் எடையைக் குறைப்பது.
இந்த டயட் முறை உடல் எடையை வேகமாகக் குறைத்தாலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும். தற்காலிகமாக உடல் எடை குறையுமே தவிர, அது ஆரோக்கியமானது அல்ல. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் சோர்வு, உடல் வலிமை குறைதல், மயக்கம், நோயெதிர்ப்பு சக்தி குறைதல் ஆகிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். வளர்சிதை மாற்றத்தையும் சீர்குலைக்கிறது. இது உடல் எடை குறைவதை கடினமானதாக ஆக்கும்.