Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?
Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும் இருக்கிறது.
பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் இந்தப் பிரச்னை சரியாக ஏதேனும் தீர்விருந்தால் சொல்லவும்.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி

நெஞ்சு கரித்தல் மற்றும் எதுக்களித்தல் பிரச்னைக்கான முக்கிய காரணம், இரவில் தாமதமாகச் சாப்பிடுவது. அடுத்து அதிக காபி, டீ குடிப்பவர்களுக்கும் இந்த இரண்டு பிரச்னைகளும் இருக்கும்.
வயிற்றில் சுரக்கும் அமிலமானது அதிகரிக்கும்போது, நம் உணவுக்குழலுக்குள் உள்ள எலாஸ்டிக் மாதிரியான வால்வு பகுதியைச் சேதப்படுத்துவதால், அமிலமானது மேலே ஏற ஆரம்பிக்கும்.
'ஆசிட் ரெஃப்ளெக்ஸ்' எனப்படும் இந்தப் பிரச்னையில், வறட்டு இருமல் வரும். இரவுத் தூக்கம் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பிரச்னை வராமலிருக்க, இரவில் சீக்கிரமே சாப்பிட்டு விட வேண்டும்.
உணவில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நெஞ்சு கரித்தல் பிரச்னைக்கு அற்புதமான மருந்து சீரகம். அகத்தை சீராக வைப்பதுதான் சீரகம். 100 கிராம் அளவு சீரகத்தை எடுத்து, அது மூழ்கும் அளவுக்கு எலுமிச்சைப்பழச் சாற்றில் ஊற வைக்கவும்.
இதை இரண்டு நாள்கள் வெயிலில் காய வைக்கவும். சீரகம் எலுமிச்சைப்பழச் சாறு முழுவதையும் இழுத்துக்கொண்டிருக்கும். இப்படிச் செய்கிற சீரகத்துக்கு 'பாவனை சீரகம்' என்று பெயர்.
பாவனை செய்வது என்றால் ஊறவைப்பது. எலுமிச்சைப் பழச்சாற்றில் ஊற வைத்த சீரகத்தைப் பொடித்துக்கொள்ளவும்.
இத்துடன் சம அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளவும். எப்போதெல்லாம் நெஞ்சு கரிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பொடியில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்டால், உமிழ்நீர் நன்கு சுரக்கும். அப்படிச் சுரக்கும்போதே நெஞ்சு கரித்தல், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் சரியாகிவிடும்.

சீரகத்தை ஊறவைத்துப் பொடித்து, இப்படியெல்லாம் செய்ய நேரமில்லை என்றால், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஏலாதி சூரணத்தைப் பயன்படுத்தலாம்.
ஏலாதி என்றால், ஏலக்காயை ஆதியாக, அதாவது முதல் மருந்தாக வைத்துச் செய்யப்பட்ட சூரணம். சுக்கு, மிளகு போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மிகப் பாதுகாப்பான சித்த மருந்து இது.
இந்தச் சூரணத்தில் அரை டீஸ்பூன் அளவு வாயில் போட்டுக் கொண்டு, இளம் சூடான நீர் குடித்துவிட்டால், அசிடிட்டி உடனே சரியாகிவிடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.