Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா?
உணவு சூடாக இருக்கையில் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிற சித்த மருத்துவர் செல்வ சண்முகம், தினமும் இருவேளை சூடாக சாப்பிடுவதற்கான வழிமுறைகளையும், 'பந்திக்கு முந்து' என்கிற பழமொழியின் பின்னணியில் உள்ள ஆரோக்கிய காரணத்தையும் விவரிக்கிறார்.

''சூடான உணவில் ருசி கூடுதலாக இருக்கும்; கெடுதல்களும் குறைவாக இருக்கும். ஓர் உணவு கெட்டுப்போவதற்குக் காரணம், மைக்ரோ ஆர்கானிசம். சமைத்து நேரம் ஆக ஆக மைக்ரோ ஆர்கானிசம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும்.
பொதுவாக உணவு சமைத்து 3 மணி நேரம், 4 மணி நேரம் ஆனபிறகு உணவின் சூடு எப்படிக் குறைகிறதோ அதேபோல சுவையும் குறையும்.
இந்த நேரத்துக்குள் உணவை சாப்பிட்டு விடுவதே சிறந்தது. இதைத் தாண்டி நேரமாகும்போது ஏற்கெனவே சொன்னதுபோல கிருமிகள் வரும். சூடாக சாப்பிட வேண்டும் என்கிற கருத்தைத்தான் 'பந்திக்கு முந்து' என்று சொல்லி வைத்தார்கள்.
ஆனால், இன்றைய வேலைபார்க்கும் பெண்கள் காலை 6 அல்லது 7 மணிக்குள்ளாகவே மதிய உணவு வரை சமைத்துவிடுகிறார்கள். அதனால், சமைத்து பல மணி நேரம் கழித்துதான் பெரும்பாலானோர் சாப்பிடுகிறோம்.
இந்த உணவில் சுவையும் குறையும்; கிருமிகளும் வளர்ந்திருக்கும். இதற்கு சிம்பிளான தீர்வு, ஹாட் பாக்ஸ்தான்.

இதெல்லாம் தேவையா என்பவர்களுக்கு, என்னுடைய பேஷன்ட்களுக்கு நான் சொல்லித்தருகிற ஒரு டெக்னிக்கை சொல்கிறேன்.
காலையில் சமைத்ததும் சாப்பாடு, குழம்பு, பொரியல் என சூடாக சாப்பிட்டு விடுங்கள். மதியத்துக்கு இட்லியுடன், பருப்புப்பொடி, கறிவேப்பிலைப்பொடி, பூண்டுப்பொடி, வெந்தயப்பொடி என எடுத்துச்செல்லுங்கள். இந்த வகையில், காலை வேளை உணவை நீங்கள் சூடாக சாப்பிட முடியும்.
பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றலாம். காலை அவசரத்தில் ஓர் இட்லி, ஒரு தோசை எனச் சாப்பிட்டு விட்டுச் செல்லும் அவர்கள், மதியமும் ஏதோவொரு கலந்த சாதமும் உருளைக்கிழங்கும்தான் சாப்பிடுகிறார்கள்.
இதில் அவர்களுக்கு எப்படி புரதமும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்? அதனால், குழந்தைகளையும் காலையில் சுடுசாதம் சாப்பிடப் பழக்கலாம்.
ஆரம்பத்தில் 'காலையில் சாப்பாடா' என்றுகூட தோன்றும். ஆனால், அந்த சூடும் சுவையும் பிடித்தப்பிறகு அவர்களே அந்தப் பழக்கத்தைவிட மாட்டார்கள். இதனால், ஒருநாளின் முதல் உணவு ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...