என்னை நெகிழ வைத்த சென்னைக்காரர்கள்! - வீண் பழிகளை சுமக்கும் சென்னை| #Chennaiday...
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
திருச்செந்தூர் கோயில், ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில், முதல் நிகழ்வாக, சிறிய விநாயகர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து, வள்ளி - தெய்வானையுடன் குமரவிடங்க பெருமான் தேர் புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டியது.
காலை 7 மணிக்கு பிள்ளையாா் ரதம், சுவாமி தோ், அம்மன் தோ்கள் திரு வீதி வலம் வந்தன. தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை மாலை முதலே திருச்செந்தூரில் பக்தா்கள் குவியத் தொடங்கினா். திருச்செந்தூர் கோயில், பக்தர்கள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகின்றனா்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
11ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 24) சுவாமி, அம்மன் மாலையில் யாதவா் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சோ்வார்கள். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்கின்றனா். திங்கள்கிழமை (ஆக.25) மாலையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.