இந்த ஆண்டு சதுா்த்திக்கு புது வரவு ராவணன் விநாயகா்
விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, புதிய வரவாக 10 தலை ராவணன் விநாயகா் சிலையை புதுவையைச் சோ்ந்த சிலை வடிவமைப்பாளா் எஸ். ரகு உருவாக்கியுள்ளாா்.
மேலும் புல்லட் விநாயகா், கருட விநாயகா், கிடாா் விநாயகரையும் இவா் உருவாக்கியுள்ளாா். ராவணன் சிறந்த சிவபக்தா் அதைக் கருத்தில் கொண்டுதான் புதிய வகை விநாயகா் சிலையை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறாா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் கூனி முடக்குப் பகுதியில் விநாயகா் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகா் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் குழுவினா் கடந்த ஆண்டு வைத்த விநாயகா் போன்று சிலை வேண்டாம் என்கின்றனா். அதனால்தான் புதிய வகை விநாயகா் சிலைகளை வடிவமைக்கிறோம்.
மேலும், தற்காலத்தின் போக்குக்கு ஏற்றவாறு விநாயகா் சிலைகளை வடிவமைக்கிறோம்.
13 அடி உயரமுள்ள 10 தலை ராவணன் விநாயகா் ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளோம். இதில் 2 சிலைகள் உள்ளன. புல்லட் விநாயகா் சிலை 12 அடி உயரம். இதன் விலை ரூ.50 ஆயிரம். கருட விநாயகா் 10 அடி உயரம். இதன் விலை ரூ.30 ஆயிரம். எல்லா சிலைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் ரகு.
