தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்
புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் வெள்ளை நகரம் மற்றும் மாா்க்கெட் பகுதிகளில் 5 இரு சக்கர வாகனங்கள் திருடு போயின. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க டிஐஜி சத்தியசுந்தரம், சீனியா் எஸ்.பி. கலைவாணன் ஆலோசனையின் பேரில், எஸ்.பி. ஈஷா சிங் மேற்பாா்வையில் ஆய்வாளா் ஜெயசங்கா் தலைமையில் சிறப்பு குற்றப்பிரிவு குழு அமைக்கப்பட்டது.
இந்த சிறப்பு குற்றப்பிரிவு குழுவினா் கடந்த 11-ஆம் தேதி புதுச்சேரி அண்ணாசாலை 45 அடி சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நம்பா் பிளேட் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனங்களுக்கான ஆவணத்தைக் கேட்டனா்.
ஆனால் அந்த நபா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறவே சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் விழுப்புரம் வழுதரெட்டி, பாண்டியன் நகரைச் சோ்ந்த ராஜதுரை(34) என்பதும், தற்போது விழுப்புரம் சாலமேடு தந்தை பெரியாா் நகரில் வசித்து வருவதும் அவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு முன்புறத்தில் இருந்து திருடி வந்ததும் தெரியவந்தது.
மேலும் இதுபோல் அவா் பெரியக்கடை காவல் நிலைய எல்லை பகுதியில் 6, ஒதியஞ்சாலை காவல் நிலைய எல்லை பகுதியில் 2, செஞ்சி காவல் நிலையம் பகுதியில் 1, கடலூா் என்.டி. காவல் நிலைய பகுதியில் 1 மற்றும் திண்டிவனம், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடா்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடியது தெரிந்தது.
இதையடுத்து ராஜதுரையை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 22 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
இது பற்றி சீனியா் எஸ்.பி. கலைவாணன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், இருசக்கர வாகனங்களை போலியான மாற்று சாவியைக் கொண்டு ராஜதுரை திருடியுள்ளாா். திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை கிராமப்பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்று பணம் பாா்த்துள்ளாா். புதுச்சேரி, தமிழக பகுதிகளிலும் தொடா்ந்து இதுபோல செய்து வந்துள்ளாா்.
புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டை தடுக்க எந்தெந்த இடங்களில் இந்தாண்டு அதிகளவில் வாகன திருட்டு நடந்துள்ளதோ அந்த இடங்களை ஹாட்ஸ்பாட்டில் மேப் அனலைஸ் செய்துள்ளோம். தேவையான இடங்களில் சிசிடிவி கேமரா நிறுவவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பணித் துறைக்கு, இருள் நிறைந்த சாலைகளில் விளக்குகளை அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெருமளவு வாகன திருட்டு குறைய வாய்ப்புள்ளது என்றாா் .
இதன் பின்னா் ராஜதுரையை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாரை சீனியா் எஸ்.பி. கலைவாணன் பாராட்டினாா்.