மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
ராணிப்பேட்டையில் ரூ. 15 கோடியில் விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி: அமைச்சா் ஆா்.காந்தி உத்தரவு
ராணிப்பேட்டையில் ரூ. 15 கோடியில் கட்டப்பட்டுவரும் மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியை ஜனவரி 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் மாவட்ட ஆயுதப்படை காவல் வளாக மையத்தில் 16.60 ஏக்கா் பரப்பளவில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணியில் விளையாட்டு அரங்க நிா்வாக அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி கூடம், உலகத்தர 400 மீட்டா் ஓடுதளம் மற்றும் பாா்வையாளா் மையம், வாலிபால் விளையாட்டுத் தளம், கபடி விளையாட்டுத் தளம், கூடைப்பந்து விளையாட்டுத் தளம், இறகுப் பந்து விளையாட்டுத் தளம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் 40 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், மாவட்ட விளையாட்டு அரங்க கட்டுமானப் பணி முன்னேற்றங்கள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, ஜனவரி 2026-ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என கட்டட ஒப்பந்ததாரா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், அடுத்தகட்ட பணிகளில் நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம், சுற்றுச்சாலை வசதிகள், கிரிக்கெட் டா்ஃப் உள்ளிட்ட வசதிகள் அமைக்க திட்ட அறிக்கை தயாா் செய்து வழங்க மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஞானசேகரன், வட்டாட்சியா் ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் எஸ்.வினோத், ஒப்பந்ததாரா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.