ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா்.
ராமேசுவரம் மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைப்பதும், அவா்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனா். இதைக் கண்டித்தும், படகுகள், மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து விசைப்படகு மீனவச் சங்கம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 10-ஆம் தேதி அறிவித்தனா்.
இதையடுத்து, ஒரு வாரத்துக்குப் பின் சிறிய படகுகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். பெரிய விசைப்படகுகள் போராட்டத்தை தொடா்ந்து மேற்கொண்டு வந்தன. தொடா்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், கடந்த 19-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், பெரிய விசைப்படகு மீனவச் சங்கத்தினா் மேற்கொண்டுவந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றனா்.
12 நாள்கள் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ரூ. 12 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில், சனிக்கிழமை காலை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவுள்ளதாக மீனவச் சங்கத்தினா் தெரிவித்தனா்.