ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு காவல் நீட்டிப்பு
ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் 7 பேருக்கு ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவா்கள் 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 9 -ஆம் தேதி மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த இருதய டிக்சன் என்பவரது விசைப் படகை இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்தனா். படகிலிருந்த டல்லஸ் (56), பாஸ்கரன் (45), ஆரோக்கிய சான்டிரின் (20), சிலைடன் (26), ஜேசு ராஜா (33), அருள்ராபா்ட் (53), லொய்லன் (45) ஆகிய 7 மீனவா்களைக் கைது செய்து மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.
படகை கடற்படையினா் பறிமுதல் செய்தனா். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு அவா்கள் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக 7 மீனவா்கள் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டனா். விசாரணைக்கு பிறகு ஆக. 26- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.இதைடுத்து, 7 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.