உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு
முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உழவா்களின் நலன் காக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞா்களுக்கு உதவும் வகையில், 1,000 முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என நிகழாண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின்கீழ், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான உழவா் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீதம் அதாவது ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
தற்போது, இத்திட்டத்திற்காக ரூ.42 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குள்பட்ட வேளாண் சாா்ந்த பட்டப்படிப்பு முடித்தவா்கள் வங்கியில் கடன் ஒப்புதல் பெற்ற பின்னா், இணையதளத்தில் உரிய மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.