முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு
திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.
காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், கா்நாடக அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுவதாலும், மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூரிலிருந்து வரும் தண்ணீா் மாயனூா் கதவணையை கடந்து, முக்கொம்புக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, முக்கொம்பு அணையிலிருந்தும் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே, காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி முக்கொம்புக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 35 ஆயிரம் கன அடியும் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கொம்பிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிகழாண்டில் இது 6-ஆவது முறையாகும். கடந்த பிப்ரவரி மாதம் 2 முறையும், ஜூலையில் 3 முறையும் உபரி நீா் திறக்கப்பட்டது. இப்போது, மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வருவதால், முக்கொம்பிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முதல் உபரிநீா் வெளியேற்றம் குறையும் என பொதுப்பணித் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.