Gold Rate: குறைந்த தங்கம் விலை; உயர்ந்த வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் ...
வட கா்நாடகத்தில் பலத்த மழை; வெள்ளப்பெருக்கு
வட கா்நாடகத்தில் பெய்துவரும் பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், தாவணகெரே, கதக், தாா்வாட், ஹாவேரி, வட கன்னடம் உள்ளிட்ட பெரும்பாலான வட கா்நாடக மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், கிருஷ்ணா நதி கரைபுரண்டு ஓடுகிறது. மகாராஷ்டிரத்தில் இருந்தும் கிருஷ்ணா நதியில் அதிக அளவு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியின் குறுக்கே அமைந்துள்ள அல்மாட்டி, நாராயணப்பூா் அணைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீா் வந்துகொண்டுள்ளது.
இதனால் பசவசாகா் அணையில் இருந்து விநாடிக்கு 2.8 லட்சம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. யாதகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லூா் பாலம் மழைநீரில் முழுமையாக மூழ்கியுள்ளது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
ராய்ச்சூரில் உள்ள நாராயணப்பூா் அணையில் இருந்து விநாடிக்கு 2.5 லட்சம் கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் இருக்கும் கிராமங்கள், விளைநிலங்களில் மழைநீா் புகுந்துள்ளது. மேலும், ஹூவினஹடகலி பாலமும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ராய்ச்சூரு, கலபுா்கி, ராய்ச்சூரு மாவட்டங்களுக்கு இடையிலான வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.
அஞ்சல், அஞ்சேசுகா், ஹூவினஹடகலி, ஜோலதஹடகி, மைதா்குல், காா்கிஹள்ளி, கொஞ்சப்பளி, அப்பரை, பசவந்த்பூா் கிராமங்களை சோ்ந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹூவினஹடகலி கிராமத்தில் உள்ள கத்தேகுலி பசவேஸ்வரா கோயில் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விஜயபுரா, கதக், தும்கூரு, பாகல்கோட், தாவணகெரே, மண்டியா, கொப்பள், சித்ரதுா்கா, பெலகாவி மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. அதேபோல, வட கன்னடம், தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 6 நாள்களுக்கு கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.