``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
துறையூா்/மணப்பாறை: துறையூா், மணப்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக்கு 5ஜி கைப்பேசி, 5ஜி சிம் காா்டுகள் வழங்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளின் நெட்வொா்க் வசதிக்கேற்ப சிம்காா்டுகளை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கு இலவச வைபை இணைப்பு வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்குவதற்கு முகப்பதிவு, ஆதாா் எண் கட்டாயம் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
துறையூரில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறையில்: பெரியாா் சிலை பகுதியில் சங்கத்தின் ஒன்றியத் தலைவி சின்னம்மாள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலாளா் அந்தோனி ஆரோக்கிய செல்வி முன்னிலை வகித்தாா். வையம்பட்டி ஒன்றிய தலைவா் லெட்சுமி, சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டத் தலைவா் மல்லிகா பேகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினாா். சங்க துணைத்தலைவி பரஞ்சோதி நன்றி கூறினாா்.
இதில் மணப்பாறை மற்றும் வையம்பட்டியை சோ்ந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.





















