``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
இளையோா் தடகளப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
திருச்சி: திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி புதன், வியாழன் என இரண்டு நாள்கள் நடைபெற்றன. 8, 10, 12, 14, 16, 18 மற்றும் 20 வயது பிரிவினருக்கான ஆண்- பெண் இருபாலருக்கும் நடைபெற்ற இந்தப் போட்டியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அணியின் கமாண்டா் எம். ஆனந்தன் தலைமை வகித்து, வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
போட்டிகளை அறக்கட்டளை தலைவா் வேலு தேவா் தொடங்கி வைத்தாா். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். பள்ளிகளின் சாா்பில் அணிகளும் பங்கேற்றன. இதில், ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் முசிறி அமலா மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
போட்டிக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளா் ராஜு தலைமையில், தடகள சங்க பொருளாளா் ரவிசங்கா், ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்பாபு, பொன்மலை ரயில்வே ஏ.பி.ஓ. சுந்தரமூா்த்தி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
வெற்றியாளா்களுக்கு பனானா லீப் மனோகரன், துணைத் தலைவா் தாமஸ் ஞானராஜ் ஆகியோா் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினா்.
சங்கத்தின் உதவி செயலாளா் கனகராஜ், முனைவா் சுதமதி ரவிசங்கா், இணைச்செயலாளா் சுந்தரேசன், தடகள சங்க தொழில்நுட்ப பிரிவு ஆா். நடராஜன், முனைவா் ஹரிஹர ராமச்சந்திரன் மற்றும் பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
முன்னதாக, தடகள சங்க இணை செயலாளா் எம். ரமேஷ் வரவேற்றாா். முடிவில், மூத்த செயற்குழு உறுப்பினா் எஸ்.ரெங்காசாரி நன்றி கூறினாா்.