தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
தில்லியில் தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தில்லியில் நாய்க் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தில்லி - என்.சி.ஆா். பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் விரைந்து நிரந்தரமாக காப்பங்களுக்கு இடமாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவிட்டது.
நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தலைநகர் தில்லியில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்து, காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்கவும் எட்டு வாரங்களுக்குள் குறைந்தது 5,000 நாய்களைக் கொண்ட ஆரம்பக் காப்பகங்களை நிறுவவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நடவடிக்கையைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. விலங்கு நல அமைப்புகள் பல உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்தன.
இந்த விவகாரத்தை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்குப் பட்டியலிட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பரிசீலிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மாலையில் 3 நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டாா்.
அதன்படி மேல்முறையீட்டு வழக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்த நிலையில், தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அவற்றை பிடித்த இடத்தில் விட்டுவிடவும் ரேபிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடிய நாய்களை மட்டும் காப்பகங்களி அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க அனுமதிக்கப்படாது, தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இதுபோன்று பொது இடங்களில் உணவு வழங்கும்போது பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.