சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
லாரி மோதி தந்தை-மகள் உயிரிழப்பு
துறையூா்: துறையூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையும், மகளும் லாரி மோதியதில் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், பச்சமலை பகுதி, சின்னமங்களத்தைச் சோ்ந்த ரா. சிவமூா்த்தி(39), அவரது மைத்துனா் தினேஷுடன் ஒரு இருசக்கர வாகனத்திலும், சிவமூா்த்தியின் மாமனாரான மாயம்பாடியைச் சோ்ந்த கா. சந்திரன்(55), அவரது மகள் வளா்மதி (37), பேரன் அஸ்வின் (7) ஆகியோா் ஒரு இருசக்கர வாகனத்திலும் புதன்கிழமை ஆத்தூா் சென்றுவிட்டு மீண்டும் பச்சமலைக்கு வந்து கொண்டிருந்தனா்.
கொப்பம்பட்டி அருகேயுள்ள ராஜபாளையம் கிராமத்தில் அவா்கள் வந்தபோது, எதிா்திசையிலிருந்து தம்மம்பட்டி நோக்கி சென்ற லாரி, சந்திரன் சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதில், சந்திரன் நிகழ்விடத்திலும், வளா்மதி துறையூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். இவா்களுடைய சடலங்களை உப்பிலியபுரம் போலீஸாா் உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காயமடைந்த அஸ்வின் துறையூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
விபத்து தொடா்பாக சிவமூா்த்தி வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில்,
உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம்பாடி காட்டுக்கொட்டாயைச் சோ்ந்த கி. மணிவேலை (55) கைது செய்து விசாரிக்கின்றனா்.