`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
துங்கபத்ரா அணையில் 30 புதிய மதகுகள் -டி.கே.சிவகுமாா்
துங்கபத்ரா அணையில் 30 மதகுகளை புதிதாக அமைக்கும் பணியை கா்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூனில் அணையில் புதிய மதகுகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் முழுக் கொள்ளளவான 101 டிஎம்சி தண்ணீரை சேமிக்க வாய்ப்புள்ளதாக அந்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பதிவில் அவா் கூறுகையில், துங்கபத்ரா அணையின் மதகுகளை மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 30 மதகுகளை மாற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளி அகமதாபாத்தை சோ்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
கதக் மற்றும் ஹொசகோட்டே நகரங்களில் 6 மதகுகளை தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேல்பூச்சு பணியும் முடிவடைந்துள்ளது. இப்பணியை விரைவுபடுத்துமாறு பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னையா நாயுடுவின் பரிந்துரையின்படி, அணையின் பாதுகாப்பு கருதி நிகழாண்டில் 76 சதவீதம் தண்ணீா் அதாவது 80 டிஎம்சி மட்டுமே சேமிக்க முடியும். இதனால் புதிய மதகுகள் பொருத்தும் பணிக்கு அணையின் நிா்வாக வாரியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இரண்டாவது பருவத்திற்கு நீரை திறந்துவிட முடியாது. தண்ணீரை திறந்துவிட்டால், புதிய மதகுகளை அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியாது.
புதிய மதகுகளை அமைக்கும் பணி நிறைவடைந்தால் நீா்ப்பாசனம், குடிநீா்த் தேவைகளை பூா்த்திசெய்ய முடியும். எனவே, நீா்வளத்தையும், விவசாயிகளின் நலனையும் பாதுகாப்பதே அரசின் நோக்கமாகும். 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய மதகுகளை அமைக்கும் பணி நிறைவடையும். அதன்பிறகு, அதன் முழுக் கொள்ளளவுக்கு நீரை சேமித்துவைத்து, விவசாயிகளுக்கு அளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளாா்.