இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்!
இந்தியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள்(ஆக. 24) தமிழகம் வரவிருக்கிறார்.
நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தோ்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து தெலங்கானாவைச் சோ்ந்தவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதா்சன் ரெட்டி 'இந்தியா கூட்டணி' - எதிா்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். இருவரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.
அந்தவகையில் பி. சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள்(ஆக. 24) தமிழகம் வரவிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் வரவுள்ளனர்.