Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
Doctor Vikatan: கண் களிக்கம் எனும் சித்த மருந்து; கண் நோய்கள் அனைத்துக்கும் தீர்வாகுமா?
Doctor Vikatan: கண் களிக்கம் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கும் சித்த மருந்து, கண் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்குத் தீர்வு தரும் என்று சொல்கிறார்களே, அது எந்த அளவுக்கு உண்மை?
-மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்
நவீன மருத்துவ முறைகள் அறிமுகமாவதற்கு முன்னரே, சித்த மருத்துவத்தில் கண் மருத்துவத்துக்கு தனி இடம் இருந்திருக்கிறது. அதற்கான குறிப்புகள் சித்த மருத்துவப் புத்தகங்களிலும் இருக்கின்றன.
கண் மை
அந்தக் காலத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகளின் நீட்சியை இன்று பார்க்கிறோம். உதாரணத்துக்கு, களிக்கம் போடுவது, அஞ்சனம் இட்டு கண் நோய்களை குணப்படுத்துவது போன்றவை அப்போதிருந்து தொடர்கின்றன. கண்களுக்குத் தீட்டும் மையைக் கூட கெமிக்கல் சேர்க்கை இல்லாமல், கரிசலாங்கண்ணி இலைகளைப் பயன்படுத்தித் தயாரித்துப் பயன்படுத்துவார்கள். உண்மையில், அதுதான் ஒரிஜினல் கண் மையும்கூட.
அதேபோல தேங்காய் சிரட்டையில் மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கும் கண் மை, நந்தியாவட்டையிலிருந்து தயாரிக்கும் கண் மை என நிறைய இருந்தன.
மூலிகைகள் கலந்த கண் மை பயன்படுத்தியதால் அந்தக் காலத்தில் கண் நோய்கள் அவ்வளவாக இருந்ததில்லை. இன்று கரிசாலை வைத்துத் தயாரித்த மை பயன்படுத்துவோரெல்லாம் அரிதாகிவிட்டார்கள். கரிசாலையின் மகத்துவம் தெரிந்தவர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள், வெள்ளைக் கரிலாங்கண்ணியைக் கண்டுபிடித்து சாறெடுத்து மை தயாரித்தால் தான் அதைப் பார்க்க முடியும்.

களிக்கம்
களிக்கம் என்பது சொட்டு மருந்து மாதிரியானது. இதிலும் நிறைய வகை மருந்துகள் உள்ளன. நந்தியாவட்டை மாதிரியான மலர்களில் இருந்து சாறு எடுத்துத் தயாரிக்கிறார்கள் என்றால் பிரச்னையில்லை.
கண்களுக்கான மருந்துகள் எந்த அளவு சுத்தமானவை என்பது முக்கியம். ஏதேனும் கிருமிகள் இருந்து, அந்த மருந்தை கண்களுக்குப் பயன்படுத்தினால் பிரச்னைகள் வரலாம். இந்த மாதிரியான மருந்துகளை பாரம்பர்யமான, படித்த, அனுபவமுள்ள சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது ஓகே. சித்த மருந்துகளை பற்றிய தெளிவில்லாமல் யாரோ பரிந்துரைப்பதைப் பயன்படுத்த வேண்டாம்.
கண் மருத்துவம் என்பது மிக மிக ஜாக்கிரதையாக அணுகப்பட வேண்டும். சிறிய அலட்சியம்கூட கண்களை பெரிய அளவில் பாதிக்கலாம் என்பதுதான் காரணம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.