Simran: `நான் அவரின் தீவிரமான ரசிகை; அவர் எல்லோருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன்' - ரஜ...
Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு ஃபிட்ஸ், வளர்ந்த பிறகும் தொடருமா?
Doctor Vikatan: என் 6 மாதக் குழந்தைக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வருகிறது. காய்ச்சலும் வருகிறது. பிறந்த குழந்தைக்குமா ஃபிட்ஸ் வரும். இது பின்னாளில் அவன் வளர்ந்த பிறகும் தொடருமா, குழந்தை வளர்ந்ததும் பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் இருக்குமா, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் கொடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் சஃபி.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னையை, மருத்துவ மொழியில் 'ஃபிப்ரைல் சீஷர்ஸ்' (Febrile seizures) என்று சொல்வோம். பிறந்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியானது முழுமையடைந்திருக்காது. பொதுவாக, மூன்றரை வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி முழுமையடையாததால் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு சிக்னல் கொடுக்கும் தன்மை சரியாக இருக்காது.
உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, அதைத் தவறாகப் புரிந்துகொள்வதால்தான் ஃபிட்ஸ் எனப்படும் வலிப்பு வருவதற்கான காரணம். 'ஃபிப்ரைல் சீஷர்ஸ்' பிரச்னையானது, குழந்தை பிறந்த 3-4 மாதங்கள் தொடங்கி, 4 வயது வரை இருக்கும். இது பயப்பட வேண்டிய பிரச்னையல்ல. குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்த உடனேயே மருத்துவரை அணுக வேண்டும்.
முன்பெல்லாம் இந்தப் பிரச்னைக்கு, குழந்தைக்கு ஆசனவாய் வழியே மருந்து கொடுக்கப்பட்டது. அதைக் கொடுத்த சிறிது நேரத்தில் குழந்தை நார்மலாகி விடும். அந்த மருந்து கொடுத்த பிறகும் அடிக்கடி ஃபிட்ஸ் வருகிறது என்றால் அதை கவனிக்க வேண்டும். அது எந்த வகையான வலிப்பு நோய் என்று பார்க்க வேண்டும். வலிப்பு நோய்களில் மிகச் சாதாரணமானதும் அதிக பாதிப்பில்லாததுமாக இந்த 'ஃபிப்ரைல் சீஷர்ஸ்' வகையைச் சொல்வோம்.
பிறந்த 4 மாதங்களுக்கு முன்பே ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்தால், அது வேறு. அது ஃபிப்ரைல் சீஷர்ஸ் கிடையாது. அதேபோல காய்ச்சல் இல்லாமல் ஒரு குழந்தைக்கு வலிப்பு வந்தால், அது எந்த வயதானாலும் அது வலிப்பு நோயில் சேரும். அது எந்த வகை என்பதைத் தெரிந்துகொள்ள மூளைக்கு இஇஜி (EEG) , ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படும். பிறகு குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சலோடு வரும் ஃபிப்ரைல் சீஷர்ஸ் குறித்து பயப்படத் தேவையில்லை. 4 வயதுக்குப் பிறகு வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
என்ன காரணம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ப மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார். பிறகு நோயின் தீவிரத்தைப் பார்த்து, மருந்துகளைக் குறைக்கலாம். ஆனால், எந்த வகை வலிப்பு என்று தெரிந்தால்தான் இவற்றை எல்லாம் முடிவு செய்ய முடியும் என்பதால் நீங்கள் முறையான மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.