Doctor Vikatan: மலச்சிக்கல் பாதிப்பு; குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் திரிபலா பொடி உதவுமா?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் 10 வயதுக் குழந்தைக்கும், 70 வயது மாமனாருக்கும் மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. இன்று மலச்சிக்கல் பிரச்னை இந்த அளவுக்குத் தீவிரமாக என்ன காரணம்?
மருந்து, மாத்திரைகளின் உதவியின்றி, இவற்றிலிருந்து மீளவே முடியாதா?
சித்த மருந்துகள், குறிப்பாக, திரிபலா பொடி உதவுமா, அதைத் தொடர்ந்து எடுப்பதால் பிரச்னையில்லையா, குழந்தைக்கும் கொடுக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அபிராமி

மலச்சிக்கல் பாதிப்புக்குள்ளானவர்களையும், அஜீரணம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களையும் இன்று பல வீடுகளில் பார்க்கிறோம். அவர்களில் பலரும், மருந்து, மாத்திரைகளின் உதவியோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எளிமையான சித்த மருந்துகளின் உதவியோடு இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியும்.
மலச்சிக்கலுக்கான முக்கிய மருந்து திரிபலா சூரணம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா சூரணம்.
இந்த மூன்றையும் காயவைத்து, கொட்டை நீக்கி, பொடித்து, சலித்து பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளலாம். அதைச் செய்ய வாய்ப்பில்லாதவர்கள், சித்த மருந்துக் கடைகளில் திரிபலா சூரணமாகவே வாங்கிக் கொள்ளலாம்.
திரிபலா சூரணத்தை 2 முதல் 5 கிராம் அளவுக்கு எடுத்து, மாலை நேரத்தில் வெந்நீருடன் கலந்து குடித்தால், மலச்சிக்கல் சரியாகும். குழந்தைகள் இந்தச் சூரணம் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் கடுக்காய் லேகியத்தை நெல்லிக்காய் அளவு கொடுக்கலாம்.
என்னதான் மருந்து என்றாலும் இதைச் சாப்பிட்டால்தான் மலம் கழிக்க முடிகிறது என்று பழகிவிடக்கூடாது. நார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து மட்டும் சாப்பிட்டால் போதாது. கூடவே, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல் இல்லாமலிருக்க உடலியக்கம் முக்கியம். குடலும் நம் உடலில் உள்ள தசை போன்றதுதான். அதற்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். அப்போதுதான் குடல் சுருங்கி, விரிந்து, மலத்தை வெளித்தள்ளும். எனவே, குழந்தைகள் என்றால் நன்றாக விளையாட விட வேண்டும். மற்றவர்கள் ஏதேனும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
சீனியர் சிட்டிசன் என்றால் நடைப்பயிற்சியாவது செய்யலாம். இப்படி எதுவுமே செய்ய முடியாது என்பவர்கள், வயிற்றில், தொப்புளைச் சுற்றி நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை கடிகாரச் சுழற்சியில் 10 முறை, அதற்கு எதிர் திசையில் 10 முறை தடவிக் கொண்டு படுத்தால், மறுநாள் காலை மலம் சுலபமாக வெளியேறும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.