செய்திகள் :

டிஸோ மோரோரிக்கு ஒரு சாகசப் பயணம் - இமயத்தின் off-roading அனுபவம் | திசையெல்லாம் பனி -10

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

பாங்காங் ஏரியிலிருந்து டிஸோ மோரோரிக்கு செல்வதுதான் அன்றைய பயணத்திட்டம். காலையில் வண்டி சறுக்கியதிலிருந்தே இன்னும் கவனமாகச் சென்றுகொண்டிருந்தோம். மதிய வேளையில் ஓரிடத்தில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தச்சொல்லி சஷாங் சிறிது நேரம் பேசினார். இனி மாலை வரை கடினமான ஆஃப் ரோடிங்தான். இங்கிருந்து சாலைகளே இல்லை என்பதால், இன்று ஒரு நாள் மட்டும், பைக்கின் பின்னிருக்கையில் இருப்பவர்கள் வேண்டுமென்றால் டெம்போ டிராவலரில் பயணம் செய்யலாம் என்றார்.

சிவாவுடன் வந்திருந்த வித்யாவுக்கு ஏற்கெனவே முதுகு தண்டுவட வலி இருந்தது. கூடுதலாக மாதவிடாய்க் காலத்து வயிற்றுவலியும் சேர்ந்துகொண்டதால், டெம்போ டிராவலரில் பயணம் செய்வதாக சொன்னார். பூஜாவும் வேனை தேர்ந்தெடுத்தார். மீதமிருந்த மூன்று பெண்களில் பிரீத்தியும், அதீதியும் பைக்கிலேயே வரப்போவதாகச் சொன்னார்கள்.

நவீன் என்னிடம் ‘என்ன செய்யப்போகிறாய்?’ எனக் கேட்டார். 

‘நாம் வந்ததே இந்த அனுபவங்களுக்காகத்தானே, இப்போது நான் வேனில் ஏறினால் அதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். பைக்கிலேயே வருகிறேன்’ என்றேன்.


‘பேச்செல்லாம் நல்லாதான் இருக்கு, நடுவுல நிறுத்தச்சொல்லக்கூடாது’ என நவீன் சொல்ல, ‘மாட்டேன்’ எனத் தலையசைத்தேன். 


‘என்னமோ சொல்ற, பார்க்கலாம்’ எனப் புறப்படுவதற்கு ஆயத்தமாகி நின்றார். அடுத்த சில நிமிடங்களில் எங்களது பயணம் தொடர்ந்தது.

மதிய உணவுக்கு முன் ஒரு வாட்டர் கிராஸிங் வந்தது. அது சற்றே ஆழமான பகுதியென்பதால், வேறுவழியின்றிப் பின்னிருக்கையில் இருந்த அனைவருமே வேனில் ஏறிக்கொண்டோம். பைக்கர்கள் அப்பகுதியைக் கடந்ததும், மீண்டும் பைக்கில் பயணம் செய்தோம்.

நீர் இல்லாத ஆற்றுப்படுகையில் செல்வதைப்போல முழுக்க முழுக்க பாறைகள், கற்கள் ஒரு பகுதியில் நிறைந்திருந்தன. மணற்பரப்போ, சாலைகளோ இல்லை. வண்டியை எப்படித் திருப்பினாலும், அது கற்களின்மேல்தான் செல்லும். ஒவ்வொரு சிறு பாறை போன்ற கல்லின் மீது பைக் ஏறும்போதும் ஏற்பட்ட அதிர்வுகள் கழுத்து நரம்புகளை நேரே தாக்கின. போட்டிருந்த தலைக்கவசமே அன்று பெரும் அச்சௌகரியத்தைத் தந்தது. ‘பேசாம வேனில் வந்திருக்கலாமோ’ என மைண்ட்வாய்ஸ் கேட்காமல் இல்லை. இருப்பினும் இது நான் விரும்பி தேர்ந்தெடுத்த பயணமென்பதால் எதுவுமே குறையாகத் தோன்றவில்லை.

மதியம் இரண்டு மணியாகியும் கடைகளோ, உணவு இடமோ தென்படவில்லை. மாலையில் தங்குமிடம் வரும்வரை எங்கும் நிறுத்தமாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். மூன்று மணி சுமாருக்கு ஒரு கிராமத்தை அடைந்தோம். அங்கிருந்த மளிகைக் கடையில் சற்றே இடவசதியை ஏற்படுத்தி மேகி நூடில்ஸ் செய்து கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அதுதான் அன்றைய உணவு. அதுபோக குளிர் பானங்கள், தண்ணீர் பாட்டில்கள். காலையிலிருந்து இடைவிடாது பயணம் செய்திருந்ததால் எங்களுக்குக் கழிவறையைப் பயன்படுத்தவேண்டியிருந்தது. சஷாங் எங்களிடம் இன்றைக்கு எந்த வசதிகளையும் எதிர்பார்க்காதீர்கள் என முன்பே சொல்லியிருந்தார். அத்தனை மோசமாக இருக்கும் என அப்போதுதான் புரிந்தது. ஆண்களுக்குத் திறந்தவெளியும், பெண்களுக்குத் தண்ணீர் வசதியில்லாத ஒரு பாழடைந்த அறையையும் காட்டினார்கள்.

வாட்டர் கிராஸிங்கை கடக்கும்போது நனைத்திருந்த காலுறைகளையும், ஷூகளையும் அணியினர் காயவைத்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் அங்கிருந்த நாற்காலிகளில் காலை நீட்டிப் படுத்திருந்தோம். அங்கிருந்து ஒன்றரை மணி நேரப் பயணம்தான் என எங்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார் கேப்டன். மூன்று நாள் தொடர்ந்து ஆஃப் ரோடிங்கால் நொந்து போயிருந்ததால் வழியில் தோன்றிய இயற்கை காட்சிகளையோ, ஊர்களையோ பார்த்து ரசிக்க இயலவில்லை. மீண்டும் லே நகரம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே ஓங்கியிருந்தது.

முடிவற்றதாகத் தோன்றிய அந்த ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, டிஸோ மோரோரி ஏரி இருந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். இத்தனை தூரம் தாண்டி சீன எல்லைக்கு அருகில் மக்கள் வசிக்கும் ஓர் ஊர் இருக்கிறதென்பதே எனக்குச் சுவாரசியத் தகவல்தான். மேலும் என்னை ஆச்சர்யப்படுத்தியது அங்கிருந்த தொடக்கப்பள்ளி ஒன்று.

ஊரின் மத்தியில் இருந்த குறுகலான சந்துகளில் புகுந்து, வளைந்து சென்றோம். சிறிய ஓடையைக் கடக்க வேண்டியிருந்தது, அதைத் தாண்டியதும் எங்கள் தங்குமிடத்தைக் காட்டினார்கள். ஆனால் அங்கே நிறுத்தவிடவில்லை. பக்கத்தில்தான் ஏரி அதைப் பார்த்துவிட்டு வந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்று பார்த் சொல்ல, அப்படியே கிளம்பினோம். பத்து நிமிடப் பயணம். ஏரியின் அருகில் வந்ததும், ‘பாத்தாச்சுல வாங்க போகலாம்’ என்னும் மனநிலையில்தான் இருந்தேன்.

நேரங்கெட்ட நேரத்தில் எதிர்பாராமல் எதையாவது செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கேப்டன், அன்றும் ஒரு சம்பவம் செய்தார். எங்களுக்கு எதிரே இருநூறு அடி தொலைவில் சிறு குன்றைப் போல ஒரு மேடு தெரிந்தது. எந்த முன்னறிவிப்புமின்றி அதில் வண்டியை ஏற்றி மேலே சென்றார். சற்றே திடுக்கிட்டாலும், சுதாரித்துக்கொண்ட அணியினர் பைக்கின் ஹேண்டில் பாரை முறுக்கி, வேகத்தைக் கூட்டி, அவரைப் பின்தொடர்ந்து குன்றின் மேலே ஏறினர்.

அதிருப்தி பெருமூச்சுடன், மறுபடியும் ஆரம்பித்துவிட்டீர்களா என்று நினைத்துக்கொண்டேன். இம்முறை எனக்கு அச்சத்தை விட, கோபமே அதிகம் இருந்தது. டிவியில் வரும் பைக் விளம்பரங்களில், ‘இது பயிற்சிபெற்றவர்கள் செய்வது, வீட்டில் இதுபோன்று செய்யவேண்டாம்’ என எச்சரிக்கை அறிவிப்புடன், பைக்கர்கள் மலையேறுவதைக் காண்பிப்பார்களே அதேபோன்ற ஒரு மேடு அது. மிகுந்த சாவலான அந்த ஏற்றதை ஒவ்வொருவராகச் செய்ய, யாரும் விழுந்துவிடக்கூடாது என மனம் எண்ணிக்கொண்டேயிருந்தது.

வரமாட்டேன் என இறங்கித் தப்பியோடவெல்லாம் முடியாது. அந்தக் குன்றை ஏறுவதற்கு அது ஒன்றுதான் வழி. நடந்து அதை ஏறுவதற்கு இதுவே மேல். எங்கள் முறை வந்தபோது, நவீனிடம் வெளிப்படையாகவே எனக்கு இருந்த பயத்தைச் சொல்லிவிட்டேன்.

‘இதில் ஏறுவது ஒரு சாவலே இல்லை. சுலபம்தான். இறங்கும்போதுதான் கவனமாக இருக்கவேண்டும். அதிகம் யோசிக்காதே. வேண்டுமானால் கண்களை மூடிக்கொள்’ எனச் சொல்லி முன் சென்றார் நவீன்.

கண்களை மூடிப்பார்த்தால் இன்னும் பயமாக இருந்தது, ஆகவே இருவிழிகளையும் அகல விரித்துவைத்திருந்தேன். அவர் ஹேண்டில்பாரை முறுக்கியபோது, ஆபத்தை  உணரக்கூடிய என் மூளையின் பகுதி அவசரகதியில் அனைத்து உறுப்புகளுக்கும் தந்தியடித்து கொண்டிருந்தது. என் இதயத் துடிப்பு எகிறி, அடிவயிறு கலங்கிப் போயிருந்தது.

சரியாக ஆக்சிலரேட் செய்யவில்லையென்றால் வண்டி பின்னால் விழுந்துவிடும் அபாயம் உள்ளதால், முன்சென்றவர் மேலே ஏறியதும்தான் அடுத்தவர் செல்லவேண்டும். அப்படி எங்கள் முன் சென்ற அருண் ஏறியதும், நவீன் வண்டியை வேகமாகச் செலுத்தி அந்த மேட்டில் ஏறினார். நான் என் உயிரை கையில் வைத்து, அதை நவீனின் ரைடிங் ஜாகெட்டுடன் இறுக்கிப்பிடித்திருந்தேன்.

ஆபத்தானதாகவே இருந்தாலும், மேடேரி நிலத்தைப் பார்த்தது பெருவெற்றியைப் பெற்ற மகிழ்வைத் தந்தது. மேலே வந்ததும்தான் புரிந்தது ஏன் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தனர் என்று. அங்கிருந்து ஏரியின் நீள அகலங்களை முழுவதுமாக காணமுடிந்தது. அளவிலும், அழகிலும் பங்காங்கின் தங்கையை போலத் தெரிந்தாலும்.

டிஸோ மோரோரி அதற்கென தனிச் சிறப்புகளைக் கொண்டிருந்தது. அரிய பறவைகள் வந்துபோகும் இடமென்பதால், வைல்ட் லைப் போட்டோகிராபர்களின் விருப்பத்திற்குரியது இந்த டிஸோ மோரோரி. எண்ணிப்பார்த்தால், கடினமான பாதையைக் கடந்துவரும் ஒவ்வொரு முறையும், ஈடுயிணையில்லாத ஒன்றைக் காணப்பெறுகிறோம்.

அந்த மேட்டிலிருந்து இறங்குவதும் கொஞ்சம் கடினமாக இருந்தது. எங்கள் கூடாரங்களுக்குச் சென்று சேர்ந்ததும், அசதியில் படுத்துத் தூங்கிவிட்டேன். ஒன்றரை மணி நேர ஆழ்ந்த தூக்கம் தந்த புத்துணர்ச்சியில் இரவு பத்து மணி வரை வெளியே உலாவிக்கொண்டிருந்தேன். அந்தக் கிராமமும் மலைச்சிகரங்கள் சூழ்ந்த பகுதிதான். அந்த இரவில் என்றுமில்லாத அளவில் வானில் நட்சத்திரங்களைக் காணமுடிந்தது.


எங்கள் பெற்றோருடன் பேசி நான்கைந்து நாள்கள் ஆகிவிட்டிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. எங்கள் வேலை, வாழ்க்கை, குடும்பம் என அனைத்தையுமே கொஞ்சம் மறந்து புதியதொரு வாழ்க்கையை அந்தப் பயணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம்.


(தொடரும்)



- ராஜ்ஸ்ரீ செல்வராஜ் 

rajshriselvaraj02@gmail.com

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

எனர்ஜி லெவலை அதிகரிக்கும் ஒரு பாட்டு! - 60ஸ் பெண்ணின் ஜில் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும் | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பந்தம்! - எழுத்துலகில் நான் கண்ட வெளிச்சம் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வீரம், அறம், காதல், துரோகம் - என் மனதில் பதிந்த தருணங்கள் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க