இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!
வீரம், அறம், காதல், துரோகம் - என் மனதில் பதிந்த தருணங்கள் | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
வேள்பாரியில் என்னுள் பதிந்தவை, அறிந்தவை, தெரிந்தவை, மகிழ்ந்தவை, அழுதவை, உணர்ச்சிவயப்பட்டவை, ஈர்த்தவை இன்னும் எத்தனையோ...
வீரம், காதல், துரோகம், நட்பு, அறம், கருணை என்று சிலிர்க்கவைத்த அனுபவங்கள்...
இதோ என்னுள் வேள்பாரி என் உள்ளம் கவர்ந்த தருணங்கள்.....
கபிலர் : மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கடல் பார்க்கவேண்டும்.
நீலன் : ஏன்?
கபிலர் : அது அவ்வளவு பறந்து விரிந்தது அளவற்றது.
நீலன் : எங்கள் பாரியின் கருணையை விடவா.
தனை மயக்கி மூலிகையும் நாவல் பழ வகைகளும், தொன்னுற்றாரு வயது பழையனும், காக்கா விரிச்சியின் அதிரடியும், பழையனியின் சோகமும் வார்த்தை வல்லமையும்...
வேள்பாரி : முதல் நாளே உங்களின் காலில் தசை பிரண்டு விட்டது நாக்கறுத்தான் பூற்கள் உடல் முழுவதும் கீறிவிட்டன காக்கா விரிச்சி நிலைகுலைய வைத்தது நீலன் எதிர்பாராமல் தூக்கி அடித்து விட்டான் இவ்வளவு வலியையும் வேதனையும் தாங்கி இத்தனை மலை கடந்து வந்திருக்கிறீர்களே இனியாவது வலி தெரியாமல் நான் உங்களை என் தோளில் தூக்கிச் செல்ல அனுமதிப்பீர்களா...
கபிலர் : நீங்கள் யார்...
நான் வேள்பாரி.
கபிலரின் வரவு காட்டின் திருவிழா, அத்தி கள்ளும் அறுபதாம் கோழி கரியும், மதங்கனின் தடாரி ஆட்டமும் கொள்ளிக்காட்டு விதையும், குடநாட்டு அமைச்சர் கோலூர் சாத்தனின் திமிரும் கைகளை வெட்டி ஓடவிட்ட முடியனின் வீரமும், தலைமுறைக்காக்கும் குல நாகினிகளும் அவர்கள் நிர்வகிக்கும் நாகப்பச்சை வேலியும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கதிரவனின் ஒளி வாழும் பறம்பின் உக்கிரமேறிய விழாவான குற்றவை கூத்தும்...

வேள்பாரி : மூவேந்தர்களால் அழித்தொழிக்கப்பட்ட பதினாறு குல மக்களின் மிச்சம் பறம்பு நாட்டில் வசிக்கின்றனர்.... தழுதழுத்த குரலில் கபிலர் : இந்த மண் எங்கும் சிந்தப்பட்ட குருதியும் கண்ணீரும் உன் உள்ளங்கையில் இருக்கிறது பாரி.
கொற்றவைக் கூத்தின் பதினேழாவது வது நாள் வேளிர்களுக்கு உரியது அனைத்து குல பானர்களும் ஒருசேர முழங்க காடு கதி கலங்க காண்போர் நடு நடுங்க காட்டேறுமையை பலியிட்டு மேலெல்லாம் குருதி பூசி சினம் கொண்ட கொற்றவையின் முன் வாள் ஏந்தி ஆடும் அமலையின் ஆட்டம் ஆடுவான் வேள்பாரி...
பறம்பு நாட்டை நம்பி பறம்பு நாட்டு எல்லைக்குள் வரும் அழிந்து போன இந்த குலங்களின் கண்ணீரைத் துடைக்க நான் உயிரையும் தர சித்தமாக இருக்கிறேன் என வேள்பாரி உரத்துச் சொல்லும் உன்னதமான நாள்...
வானியல் பேராசான் திசைவேலரும் வடக்கு திசை காட்டும் தெய்வ வாக்கு விலங்குகளும், பொற்சுவையின் உடைந்து போன காதலும் ஆறுதல் சொல்லத் துடிக்கும் தோழி சுகமதியும், குறிஞ்சித் தலைவன் முருகனும் கொடி குலமகள் வள்ளியும், வேளிர் குலத்தை தோற்றுவித்த எவ்வியும் காட்டெருமையை அடக்கி தூதுவையை மணந்த சூளி வேலும், பகரி வேட்டையும் காடரியும் பயணமும், தெய்வ வழிபாடும் தேக்கனின் வழிகாட்டலும், கீதானியின் வேகமும் அலவனின் அட்டகாசமும்,
சுண்டாப் பூனையும் அதை ஆயுதமாக மாற்றிய பாரியின் வியூகமும், பாரி என்ற சொல் கேட்ட கணத்தில் குத்துவாள் நழுவ கால்கள் மண்ணில் சறுக்க கையெடுத்து கும்பிட்ட காலம்பனும் எதிரி தம் குலத்தவன் என தெரிந்ததும் துடிதுடித்து கதறிய பாரியும், எதிரி இரு கை விரித்து வந்தாலும் அடங்கா மார்பன் என்று பானர்கள் காலம்பனை வாழ்த்திய பாடலும் அதைக் கேட்டு கண்ணீர் மல்கி நின்ற திரையர் குல பெண்களும், பற்றி எரிந்த வைப்பூர் துறைமுகமும் இளமருதனின் தலையை சீவி ஆலா குதிரை மேல் ஏறி வந்த நீலனும், நெருப்பில் சிக்கிக் கொண்ட ஈங்கையன் கூட்டமும் கப்பலை உடைத்து காப்பாற்றிய காலம்பனும், நத்தைச்சூரி வேரும் பால் கொறண்டியின் திருச்ச கயிறும், பானர்களின் நெருப்புப் பாட்டும் பறம்பு நாட்டில் தினசரி கூத்தும், பாரி ஆதினி காதலும் சிறகு நாவல் பழங்களின் கூடலும், ராவெரி மரமும் வெண்சாரை தரிசனமும், சோம பானத்தின் மயக்கமும் வெடத்தப் பூவின் வாசமும், சூழவும் எதிர்ப்பும் நீலன் மயிலா திருமணமும், வெற்றிச் சின்னமாம் கருங்கிழியும் வேந்தர்களின் அணிவகுப்பும்,
அடவி ஈக்களும் கிளி மூக்கு மாங்கனியும், இறுக்கிச் செடியும் குடிசைக்குள் விண்மீன் கூட்டமும், சோழர்களின் யானைப்படையும் ஆறு வாய் கொண்ட சங்கு அட்டைகளும், நெடுங் காடர்களும் பிட்டனின் சிறுபடையும், உதியஞ்சேரலின் படை அணிகளும் தோகை நாய்களும், ஈங்கையனின் திட்டமும் சேரப் படையின் பேரழிவும், மலைக்காடையும் அதையே திட்டமாகக் கொண்ட குலசேகர பாண்டியனும், வேட்டுவன் பாறை தாக்குதலும் நீலனின் வெறி ஆட்டமும், வள்ளி கூத்தும் காரிக்கொம்பும், சோம கிழவன் பூசி விட்ட தீக்களியும் உருண்டோடிய எதிரிகளின் தலைகளும், முகம் வெந்த கருங்கைவாணனும் பற்றி எரிந்த வேட்டுவன் பாறை உச்சியும், நீலனை கடத்தலும் கொற்றனின் மரணமும்....

உடல் முழுக்க ரத்த காயங்களுடன் சோர்ந்து கிடந்த நீலனின் அருகில் சென்றார் கபிலர்..
நீலன் : புலவரே நான் உங்களை முதன் முதலில் பார்த்தபோது உங்களிடம் நான் சொன்னது நினைவிருக்கிறதா... வீரனின் வாழ்க்கை மிகக் குறுகியது போர்க்களத்தில் நான் வீழ்ந்து விட்டால் நான் விட்டுச் சென்ற எனது ஈட்டியை பற்றி முன்னேற என் மகன் வந்து நிற்க வேண்டும் என்று சொன்னேனே... நான் சொன்ன அந்த வார்த்தையை காப்பாற்றி விட்டேன், நான் சாகப் போகிறேன் அதற்குள் என் மனைவி மயிலா ஒரு வீர மகவை பெற்றெடுப்பாள். கபிலரின் கண்களில் திரண்டு இருந்த கண்ணீர் வழிந்தது தன் மகன் போல எண்ணி வந்த நீலனின் தலையை தடவினார் கபிலர்...
நீலன் : சோமக்கிழவனும் காலம்பணின் மகன் கொற்றனும் என்னை விட பெருவீரர்கள்.
கூடாரத்தை விட்டு வெளியே வந்த கபிலரிடம் முசுகுந்தர் கேட்டார் என்ன நீலன் பேரில் உங்களுக்கு அவ்வளவு பிரியமா!
கபிலர் : அவன் கஷ்டத்தை பார்த்து நான் கண்ணீர் சிந்தினேன் நான் கண்ணீர் சிந்தியது தெரிந்தால் பாரி ரத்தம் சிந்துவான்...பாரி மலையை விட்டு கீழே இறங்கி வர வேண்டும் என்று தானே நீலனை கடத்தி வந்தீர்கள் நீலனுக்காக கூட பாரி கொஞ்சம் தாமதிப்பான் நீலனை அனுப்பிவிட்டு என்னை சிறை பிடித்து வையுங்கள் அடுத்த கணமே பாரி போரை தொடங்குவான்.
உப்பரையும் உப்பரையை தாய் நிலமாக நினைக்கும் பறவைகளும் விலங்குகளும், அவற்றை வேட்டையாடக் கூடாது என நினைக்கும் அரள் ஊர் மக்களும் அவர்களின் வேளாண்மையும்,
வேள்பாரி : இந்த உப்பறை இங்கு இருப்பதால்தான் வேளிர்களிலேயே பறம்பு வேளிர்கள் தலைசிறந்து விளங்குகிறார்கள் இந்த நீர்தான் காட்டில் உள்ள எல்லா ஊர்களுக்கும் செல்லும்.... இந்த நீரையும் பறவைகளையும் விலங்கினங்களையும் செடி கொடி தாவரங்களையும் காப்பது என் உயிரினும் மேலான ஒன்று பறம்பு நாடு அனைத்து உயிர்களையும் காக்கும்... சொன்ன பாரி அந்த உப்பு நீரை நாய் போல வாய் வைத்து குடித்துவிட்டு அடுத்த நொடி வானத்தை நிமிர்ந்து பார்த்து வேட்டையை தொடங்க போகும் வேட்டை விலங்கு போல உருமினான் அந்த சத்தத்தில் கபிலரும் காலம்பனும் கூட திகைத்தனர்.
முறியன் ஆசானின் மூலிகை போர்வையும் நீலனுக்கு பாரி சொன்ன குறுஞ்செய்தியும், கரியனூர் பெரியாத்தாலும் முல்லூர் பெரியவரும், சென்றி கொடியும் ஊசி புகையும், கபிலரின் குதிரை ஏற்றமும் போரின் விறுவிறுப்பும், வேந்தர்களின் படைக்கொட்டில்களும் பறம்பு வீரர்களின் ஆயுத குகைகளும், நிலைமான் கோல் சொல்லியும் போரின் அறம் காத்த திசைவேழரும், தட்டியங்காடும் காணவர் குடியும், உறுமன்கொடியின் குதிரைப்படையும் உதிரனின் கனிப்பும், வேந்தர்களின் மூன்று நிலைப்படையும் பாரியின் மூன்று விதமான போர் உத்திகளும், சாகலைவனின் சடலமும் ஆசான் தேக்கனின் வாள் வீச்சும், கருங்கைவாணனின் ஆத்திரமும் ஆறு பரன்களின் மேல் முரசின் ஓசையும், வேந்தர் படை வீரர்களின் களைப்பும் பறம்பு வீரர்களின் நீர்வேலி படர்கொடியும், எதிரிகளின் முச்சங்கும் இறுக்கிச் செடியின் குறியீடுகளும், காற்றியும் சுருள் அம்புகளும், இகுளிக் கிழவனும் ஓங்கலமும், யட்சினி வழிபாடும் கொற்றவையின் குருதியாட்டு விழாவும், திகைப்பூச்சியும் திகைத்த குலசேகர பாண்டியனும்...

வாரிக்கையன் : யானைகளை தட்டிங்காட்டில் இறக்க மாட்டோம் என கானவர்களுக்கு நாம் வாக்களித்திருக்கக் கூடாது... இன்றைய போரில் யானை படையை இறக்கியிருந்தால் எதிரிகளின் படை பாதியாக குறைந்திருக்கும்.
வேள்பாரி : வாக்கு கொடுத்த பிறகு கொடுத்த வாக்குக்காக கவலைப்படுவது கோழைத்தனமல்லவா...
தன்னை நம்பாமல் தன் வீரத்தை நம்பாமல் ஒரு ஒற்றர் படையை நம்புபவன் எப்படி போரில் வெற்றி பெறுவான், அறமற்ற வழியில் தந்திரம் என பெயர் வைத்து போரில் அதை ஒரு யுத்தி என குறிப்பிடுவது கோழைகளின் செயல் அறம் காத்து போரிடுவதே நாம் வெற்றி பெற்றதற்கு சமம்.
குதிரைகளை பலி கொடுத்த செம்மாஞ்சேரலும் தேக்கனின் மூன்று மகன்களும், மூவிலை வேலும் மூலிகை மெய் கவசமும், மூஞ்சல் நகரும் பாரியின் குலவன் திட்டும், காற்றில் பறந்த அம்புகளும் கதி கலங்கிய வேந்தர்களின் இறுதி நிலைப்படைகளும், ஆட்கொல்லி மரமும் எதிரிகளோடு தானும் மடிந்த வேட்டூர் பழையனின் வீரமும், காராளியின் காமன்விளக்கும் நிலமுரண்டி பூவின் அற்புதமும், ஈங்கையனின் துரோகமும் பொற்சுவையின் தியாகமும், நொறுங்கிய மூஞ்சலும் மாவீரன் இரவாதனும், பாரியின் கால் பிடித்து கதறிய ஆசானும் உரைந்து போன காடும், மாவீரன் இரவாதனின் மரணமும் கடமை தவறாத தந்தை முடியனும், மடியில் தலை மாணவியின் உடலும் கதறிய ஆசானும், சுகமதியின் வெடித்த அழுகையும் பாட்டா பிறையின் பரபரப்பும், பறம்பு ஆசான் தேக்கனின் விடை பெறுதலும் கூவல் குடியினரின் கதறல் ஓசையும்...
திசைவேழர் : இன்றைய போரில் நமது படை விதிகளை மீறிவிட்டது...
கருங்கைவாணன் : அப்படி யாரும் எமது தரப்பில் விதியை மீறவில்லை.
திசைவேழர் : போர் விதி மீறப்பட்டதை நானே பார்த்தேன்...
மையூர்கிழார் : அப்படி என்றால் யார் அந்த விதியை மீறியது என்பதை தாங்களே கூற வேண்டும்.
திசைவேழர் : விதியை மீறியது சோழ வேலனும் பொதிய வெற்ப்பனும்... விதியை மீறிய இருவரும் இக்கணமே இந்த போர்க்களம் விட்டு நீங்க வேண்டும், இனி வாழ்வு முழுவதும் அவர்கள் ஆயுதங்களை கை கொள்ளவே கூடாது...
மையூர் கிழார் : திசைவேழரை வணங்குகிறேன் எங்கள் தரப்பு நிலை மான் கோல் சொல்லி நீங்கள் தான் தங்களிடமிருந்து நான் தெளிவு பெற வேண்டிய சில விஷயங்கள் உள்ளது தவறாக கருத வேண்டாம், நீங்கள் இருக்கின்ற இந்த பரனில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது மூஞ்சல் நகர் அங்கு போர் நடந்து கொண்டிருக்கும் போது அம்பெய்தது முரசின் ஓசை கேட்பதற்கு முன்பா பின்பா என்பதை இங்கிருந்து கணிப்பது எளிதல்லவே.
திசைவேழர் : இங்கிருந்து அந்த மூஞ்சல் நகர் எவ்வளவு தூரம் இருக்கும்,
பறம்பு ஆசான் தேக்கனின் மனகேதம் : இரவாதனின் மீது எந்த தவறும் இல்லை அவன் கடமையை அவன் சரிவர செய்தான் அவனோடு சேர்ந்து இணையாக போரிட வேண்டிய நானும் முடியனும் தவறிழைத்து விட்டோம் பொற்ச்சுவை மரணம் கபிலரின் கண்ணீர் எதிரியை பாரியிடம் நெருங்க விட்டது இவற்றில் குழம்பி மனதெளிவின்றி இருந்து விட்டோம் இனி நான் போர்க்களம் புகுந்து என்னவாக போகிறது ஆயுதங்களை கைக்கொள்ள முடியாத எனது இருப்பு பறம்பு வீரர்களின் மரண வழிக் தடலாக மாறி நிற்கிறது நான் இருக்கும் வரை பாரி பறம்பின் எல்லைகளை விட்டு களம் இறங்க மாட்டான் பாரி களம் இறங்காத வரை இது போன்ற மாவீரர்களின் இழப்புகளை தவிர்க்க முடியாது எண்ணற்ற போராளிகளையும் வீரர்களையும் இனியும் நாம் போர்க்களத்தில் பலி கொடுக்கக்கூடாது அதற்கு இருக்கும் ஒரே வழி பாரி களமிறங்க நான் வழி விடுதல் மட்டுமே, எண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வந்தான் தேக்கன்.
திசைவேழர் : எனது தண்டனையை ஏற்பதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறேன் விதியை மீறிய சோழ வேலனும் பொதிய வெற்பனும் இப்பொழுது ஆயுதங்களைத் துறந்து இந்த போர்க்களம் விட்டு நீங்க வேண்டும்.
சேர அமைச்சன் : நீங்கள் அறம் தவறி பேசுகிறீர்கள் திசைவேழரே,
திசை வேழரின் குரல் முன்னுக்கும் இன்னும் உரத்த குரலில் : போர் விதியை ஏற்று முரசின் ஓசை கேட்டதும் ஆயுதங்களை தாழ்த்திய இராவதனே உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன், விதிமுறைகளை மதிக்கத் தெரியாத வேந்தர் படைக்கு நிலைமான் கோல் சொல்லியாக இருந்த நான் இந்த தவறுக்கு பொறுப்பேற்று எனக்கு தண்டனை வழங்கிக் கொள்கிறேன்...
அதோ வானத்தில் இருக்கும் விண்மீன்களை என்னால் பார்க்க முடிகிறது ஆனால் என் மனதிற்குள் சுடர் விட்டு பிரகாசமாக ஏறிந்து கொண்டிருப்பது மூஞ்சலுக்குள் நீ வெளிப்படுத்தி அந்த வீரமே...
உன்னைப் போன்ற நெறி பிறழாத மாவீரர்கள் என்றென்றும் போற்றப்படுவார்கள்...
நீ இரவா புகழோடு வாழ்வாய்...
இரவாதன் மரணம் அற்றவன் என்பதை காலம் உணர்த்தும்...
தட்டியங்காட்டு போரின் நினைவிருக்கும் வரை உனது புகழ் இருக்கும்.
காற்றியால் ஆடிய பரணும் அறத்திற்காக உயிர்விட்ட வானியல் பேராசான் திசைவேழரும், ஈக்கி மணலும் செங்காவி நிற ஓணான்களும், திறமை வாய்ந்த கட்டையர்களும் அரிமான்களும், கொட்டும் மழையும் கொம்பு தூக்கி வண்டுகளும், அனலி பூச்சிகளும் வேந்தர்களின் ஓட்டமும், காரிருள் வானமும் அந்த இருள் முழுக்க பயமும் அந்த பயம் முழுக்க பாரியும், எதிரிப்படை தளபதி துடும்பனும் மின்னல் வெட்டில் தலையை வெட்டிய உதிரனும், காட்டாற்றைக் கடக்க தயங்கி நின்ற நம் மக்களும் காற்றியை பயன்படுத்தி சமயத்தில் உதவிய இகுளிக் கிழவனின் கூட்டமும், முடியனே திகைத்து போன தருணமும் குலவன் திட்டில் நின்று சிரித்த இகுளிக்கிழவனும்,
செவ்வரி மேட்டில் சிதறிய எதிரிகளும் தந்த முத்துக்காரர்களின் தந்திரமும், எரி மதம் கொண்ட யானைகளும் அல்லங்கீரனின் யானை படையும், கோபம் கொண்ட கருங்கைவாணனும் உக்கிரமான காலம்பணும், பாரி சுழற்றிய எருள்தடியும் முகம் சிதைந்த மையூர் கிழவரும், கண்டறக் கோடாரியும் சொருகப்பட்ட பொதியவேற்பனும், தோற்று ஓடிய வேந்தர்களும் வேந்தர் படைகளும், யானையின் மேல் தந்த முத்துக்காரர்களும் அவர்களுக்கு மேல் பாரியும் பாரியின் மார்பில் சாய்ந்த நீலனும், கொற்றவைக்கு குருதியாட்டு விழாவும் இறந்த வீரர்களுக்கு மரியாதை சடங்குகளும், பொற்சுவையின் அடையாளமாக பச்சை மண் பொம்மையும் கபிலரே மெய் சிலிர்த்து கண் கலங்கிய திசைவேழருக்கான மரியாதையும் - அப்போது வேள்பாரி சொன்ன வார்த்தையும்.....
அறம் காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும்
எம் மக்களை ஆளட்டும்
எம்மை ஆளட்டும்...
இன்னும் எத்தனை எத்தனையோ குறிப்பிடத் தவறியிருக்கலாம்.
என்னுள் வேள்பாரியா வேள்பாரியினுள் நானா தெரியவில்லை....
கடையேழு வள்ளல்கள் என்றாலும் வள்ளல் என்றாலே நினைவில் முதலில் வருபவன் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி... நமக்குத் தெரியாத பாரியின் மறுபக்கத்தையும் அவன் வீரத்தையும் பறம்பு நாட்டையும் மலை மக்களின் வாழ்க்கை முறையையும் பண்டைய தமிழ் பண்பாட்டையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துக்காட்டிய பாரி வாழ்ந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்ற பறம்பு நாட்டு வீதிகளில் நம்மை உலாவ விட்ட ஆசான் சு. வெங்கடேசன் அவர்களுக்கு நமது கோடான கோடி நன்றிகள்
தமிழ் உள்ளவரை வேள்பாரி வாழ்வான்
சு.வெங்கடேசன் உள்ளவரை தமிழ் வாழும்
விகடன் உள்ளவரை திறமையான கலைஞர்கள் அவதரித்துக் கொண்டே இருப்பார்கள்....
-சி. பாரத்
மதுரை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!