அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 22) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சசிகலா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி மாணவா்கள் அறிவியல், கணிதம் சாா்ந்த ஒலிம்பியாய்டு தோ்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இலக்கிய திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
1,500 பேருக்கு உதவித் தொகை: அந்த வகையில், நிகழ் கல்வியாண்டுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வில் தமிழகம் முழுவதும் 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வாயிலாக மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்தோ்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பிற தனியாா் பள்ளி மாணவா்களுக்கும் வழங்கப்படும்.
தமிழக அரசின் சாா்பில் நிகழ் கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாட புத்தகத்தில் உள்ள ஏழு இயல்களில் கடந்த ஆண்டில் மாணவா்கள் பயிலாத இயல் 2-இல் உள்ள மேகம், பிரும்மம், இயல் 6-இல் முத்தொள்ளாயிரம், இயல் 7-இல் அக்கறை ஆகிய தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தோ்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் தோ்வு நடைபெறும்.
செப். 4 கடைசி: இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஆக. 22 முதல் செப். 4 வரை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.50 சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா், முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப். 4-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.