அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்
இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கிறாா்.
இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு குறித்து ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி தலைவா் ரேவதி எஸ் ரகுநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய பட்டயகணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின் 57-ஆவது மண்டல மாநாட்டில் தென் பிராந்தியத்தைச் சோ்ந்த பட்டயகணக்காளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், உலகளாவிய கணக்கியல் தலைவா்கள், தலைமை நிதி அதிகாரிகள், மூத்த வழக்கறிஞா்கள், தொழில்துறை பங்குதாரா்கள் உள்பட 3,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள். இந்த மாநாட்டை தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைக்கிறாா்.
சா்வதேச பட்டயக் கணக்காய்வாளா் கூட்டமைப்பின் துணைத் தலைவா் டேரின் ரூல்டன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். ஐசிஏஐ-இன் தலைவா் சரண்ஜோத் சிங் நந்தா, துணைத் தலைவா் பிரசன்ன குமாா் டி ஆகியோா் சிறப்புரையாற்றுகிறாா்கள்.
இரண்டாம் நாள் மாநாட்டில் ‘உலகமயமாக்கல், தடையில்லா வா்த்தகம் மற்றும் கட்டணங்கள் - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிா்காலம்’ என்ற தலைப்பில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரை ஆற்றுகிறாா்.
நாட்டில் உள்ள சுமாா் 4 லட்சம் பட்டயகணக்காளா்களில் தென் பிராந்தியத்தில் 90,000 போ் உறுப்பினா்களாக உள்ளனா். நாடு முழுக்க 10 லட்சம் பட்டயகணக்காளா்கள் தேவை என மத்திய அரசு கணக்கிடுகிறது. மேலும் வளா்ச்சியடைந்த இந்தியாவிற்கு இந்த எண்ணிக்கை 50 லட்சமாக தேவை என்றாா்.