தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
கமுதியில் வீடுகளுக்குள் தேங்கி நிற்கும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் முறையாக கழிவுநீா் கால்வாய் அமைக்காததால் வீடுகளுக்குள் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கமுதி பேரூராட்சிக்குள்பட்ட காமாட்சி செட்டியாா் தெருவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது, பணிகள் முடிவுற்ற நிலையில் இந்தப் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செல்ல முடியாமல், வீடுகளுக்குள் தேங்கி நிற்கிறது. இதனால், துா்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துராமலிங்கம் கூறியதாவது:
சுப்பையாதேவா் குடியிருப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குழாய்கள் பூமிக்கு அடியில் 5 அடிக்கு கீழ் பதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்ட கால்வாய் தரையிலிருந்து 3 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டன. இதனால், பழைய வீடுகளிலிருந்து வெளியேறும் தண்ணீா் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது.
கால்வாய் வழியாக தண்ணீா் வெளியேற வழியின்றி 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது.
எனவே, மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் தலையிட்டு முறையாக கழிவுநீா் கால்வாயை அமைக்க வேண்டும். இல்லையெனில் பேரூராட்சி அலுவலகத்தை குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.