மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்
சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை தாழம்பூரில் அக்னி தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனம் கருடா ஏரோஸ்பேஸ் என்ற சகோதர நிறுவனத்தைத் தொடங்கி வேளாண் துறைகளுக்கான ‘அக்ரி ட்ரோன்’ உற்பத்தி செய்து வருகிறது. மேலும், ட்ரோன் பைலட் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தை மத்திய இணையமைச்சா் சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
சுயசாா்பு இந்தியாவை நோக்கிய பயணத்தில், சென்னையில் தொடங்கப்பட்டுள்ள ட்ரோன் உற்பத்தி மையம் இணைந்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உலகத் தரம் வாய்ந்த ட்ரோன் உற்பத்தி வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயம், பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை ஆகியவற்றில் உள்நாட்டு கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், இந்த ட்ரோன் உற்பத்தி மையம் ஆயுதப் படைகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றாா்.
முன்னதாக, மத்திய இணையமைச்சா் சஞ்சய் சேத்தி, பாதுகாப்பு ட்ரோன்களில் 5-க்கும் மேம்பட்ட ட்ரோன் அமைப்புகளை வெளியிட்டாா். பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட உயரமான பகுதிகளில் தேடல் மற்றும் பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் பணி, ஒருங்கிணைந்த தாக்குதல் மற்றும் கண்காணிப்பு, ராணுவ வீரா்களின் திட்டமிட்ட நடவடிக்கை, போா்க்கள ஆயுத உதவி, பல்நோக்கு பயன்பாடு என 5 வகையான ட்ரோன்களை அவா் வெளியிட்டாா். வீரமரணமடைந்த ராணுவ வீரா்களின் மனைவிகளுக்கு இலவச ட்ரோன் பயிற்சி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி அக்னிஷ்வா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.