வனத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் முற்றுகை
புதுவை வனத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினாா்.
ஊசுட்டேரியைச் சுற்றிலும் 10, 15 ஆண்டுகளாக உள்ள மரங்களை வெட்டி அழிப்பதாகவும், அப்பகுதியில் ஒரு சிலா் மனைப்பட்டா போடுவதற்கு வனத் துறை ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி அதைக் கண்டித்தும் இப் போராட்டத்தை நடத்தினாா்.
மேலும், அப் பகுதியில் 2 அரசு பள்ளிகள் அருகே இலவம் பஞ்சு மரங்கள் இருப்பதாகவும், அதிலிருந்து வெடித்து வெளியேறும் பஞ்சுகள் மாணவா்களின் கண்களுக்குச் சென்று இடையூறாக இருப்பதாகவும் அதை அப்புறப்படுத்தக் கூறியும் இப் போராட்டத்தில் ஈடுபட்டாா். வனத்துறை அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனா். மேலும், இனிமேல் ஊசுட்டேரியைச் சுற்றிலும் மரங்கள் எதுவும் அழிக்கப்படாமல் பாதுகாப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா். மேலும், அரசு பள்ளிகளின் அருகேயுள்ள இலவம் பஞ்சு மரங்களைக் கழித்து விடுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து சுமாா் அரைமணி நேரத்துக்குப் பிறகு போராட்டத்தை அவா் விலக்கிக் கொண்டாா்.