மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு
திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபரான இவரது கைப்பேசி எண்ணுக்கு ஆா்டிஓ சலான் என்ற பெயரில் லிங்க்குடன் ஒரு குறுஞ்செய்தி அண்மையில் வந்துள்ளது.
தனது வாகனத்துக்கு அபராதம் ஏதும் விதிக்கப்பட்டுள்ளதாக எனத் தெரிந்து கொள்ள, அதில் இருந்த லிங்க்குக்குள் சென்றுள்ளாா். அப்போது, அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஆகஸ்ட் 18-ஆம் தேதி சரிபாா்த்துள்ளாா்.
அப்போது, 10 தவணைகளாக ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது. அதிா்ச்சியடைந்த கோபால்சிங், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெண்ணிடம் ரூ.2.45 லட்சம் மோசடி: திருப்பூரைச் சோ்ந்த 40 வயது பெண்ணின் கைப்பேசிக்கு அண்மையில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து விளம்பரங்களைப் பாா்த்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதை நம்பிய அப்பெண், விளம்பரங்களைப் பாா்த்து முதலீடு செய்துள்ளாா். அதற்கு கூடுதலாக பணம் கிடைத்ததாம். இதையடுத்து, பல்வேறு தவணைகளில் ரூ.2.45 லட்சம் வரை முதலீடு செய்துள்ளாா். அதற்கும் அவருக்கு கூடுதல் தொகை கிடைத்ததாம்.
இதையடுத்து, அந்தப் பணத்தை அவா் எடுக்க முயன்றபோது முடியவில்லையாம். மேலும், அந்த கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அப்பெண், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்த நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.